வால்மீகி மேம்பாட்டு ஆணைய வழக்கில் சத்ய நாராயணா ஜாமின் மனு தள்ளுபடி
வால்மீகி மேம்பாட்டு ஆணைய வழக்கில் சத்ய நாராயணா ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : டிச 01, 2024 11:08 PM
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு தொடர்பாக, கைதான சத்ய நாராயண வர்மாவின் ஜாமின் மனுவை, உயர்நீதமன்றம் தள்ளுபடி செய்தது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பழங்குடியினர் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தும் வால்மீகி மேம்பாட்டு ஆணையம் இயங்கி வருகிறது.
இந்த ஆணையத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகர், 50, இரண்டு மாதங்களுக்கு முன், ஷிவமொக்காவில் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜினாமா
இவர் இறப்பதற்கு முன், எழுதி வைத்திருந்த கடிதத்தில், ஆணையத்துக்கு சொந்தமான 87 கோடி ரூபாயை, சட்டவிரோதமாக வேறு கணக்குகளுக்கு மாற்ற தனக்கு சிலர் நெருக்கடி கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதே காரணத்தால் நாகேந்திரா, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இம்முறைகேடு தொடர்பாக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதின் கூட்டுறவு வங்கி சேர்மன் சத்யநாராயண வர்மா உட்பட, பலர் கைதாகினர்.
சிறையில் உள்ள சத்ய நாராயண வர்மா, ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது தன் வக்கீல் மூலம், சத்ய நாராயண வர்மா, 'நான் நிரபராதி. என்னை இந்த வழக்கில் பலிகடா ஆக்கியுள்ளனர். உண்மையான குற்றவாளிகள், என்னை கொலை செய்வதாக மிரட்டுகின்றனர்.
உயிருக்கு ஆபத்து
இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கும் படி, நான் கோரியும் ஆளுங்கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் இருந்து தப்புகின்றனர். சிறையில் என் உயிருக்கு ஆபத்து உள்ளதால், ஜாமின் அளிக்க வேண்டும்' என கோரினார்.
போலி ஆவணங்கள்
சி.ஐ.டி., தரப்பில் ஆஜரான வக்கீல், 'சத்ய நாராயண வர்மா, மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து, சதி செய்து போலியான ஆவணங்களை உருவாக்கி, மோசடி செய்துள்ளார்.
இவரது வீட்டை சோதனை நடத்திய போது, 8.48 கோடி ரூபாய் ரொக்கம், 15 கிலோ தங்கம், 3.4 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டுகள், 3.31 கோடி மதிப்புள்ள கார், 1.2 கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொரு கார் கண்டுபிடிக்கப்பட்டது.
இவருக்கு ஜாமின் அளித்தால், இவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால், அரசு தரப்பு சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ வாய்ப்புள்ளது. எனவே ஜாமின் அளிக்க கூடாது' என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், 'சிறையில் குற்றவாளிகளுக்கு உயிர் பயம் இருந்தால், இது பற்றி போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.