ராணி லட்சுமிபாய் சிலையை அகற்ற பா.ஜ., சதி ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
ராணி லட்சுமிபாய் சிலையை அகற்ற பா.ஜ., சதி ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
ADDED : செப் 26, 2024 10:54 PM
விக்ரம் நகர்:டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் அருகே உள்ள ராணி லட்சுமிபாய் சிலையை அகற்ற பா.ஜ., சதி செய்வதாக, ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
மூத்த ஆம் ஆத்மி தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் கூறியதாவது:
டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் அருகே உள்ள ராணி லட்சுமிபாய் சிலையை அகற்ற பா.ஜ., சதி செய்கிறது. தேசபக்தர்களை அவமதிக்கும் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு துரோகம் செய்யும் பா.ஜ.,வின் தற்போதைய பாரம்பரியத்தின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது பா.ஜ., உறுப்பினர்களும் அவர்களின் சித்தாந்த முன்னோடிகளும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளித்தனர். அவர்களின் செயல்களில் இந்த துரோகம் இன்றும் தொடர்கிறது.
நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த ராணி லட்சுமிபாயின் சிலை இருப்பதை பா.ஜ.,வால் சகித்துக்கொள்ள முடியாது. மேலும் சிலை அகற்றப்படுவதைத் தடுக்க ஆம் ஆத்மி கட்சி தலைநகர் முழுவதும் பெரிய அளவிலான பிரசாரத்தை நடத்தும்.
பார்லிமென்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க நாடு முழுவதிலுமிருந்து மக்கள் வந்தனர். ஆனால் இந்த மாபெரும் தலைவர்களின் சிலைகளை அகற்றி மத்திய பா.ஜ., அரசும், பிரதமர் மோடியும் அவமதித்துள்ளனர்.
தற்போது, ஜான்சி ராணி லட்சுமிபாய் சிலையை அகற்ற பா.ஜ., சதித்திட்டமிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்திற்கு முன்பாக உள்ள ராணி லட்சுமிபாயின் சிலை அகற்றப்பட்டால், டில்லி முழுவதும் பா.ஜ.,வை அம்பலப்படுத்துவோம், ஹரியானாவில் இந்த விவகாரத்தை மக்களிடம் கொண்டு செல்வோம். பா.ஜ.,வின் இந்தச் செயல், மன்னிக்க முடியாத குற்றம் மற்றும் தேசத்துரோகச் செயலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

