துபாய், சிங்கப்பூர் சுற்றுலா செல்ல சதீஷ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் திட்டம்
துபாய், சிங்கப்பூர் சுற்றுலா செல்ல சதீஷ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் திட்டம்
ADDED : ஜன 19, 2025 06:59 AM
பெலகாவி: “வாயை மூடிக்கொண்டு அனைவரும் வேலை செய்யுங்கள்,” என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் துபாய், சிங்கப்பூர் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கர்நாடக அரசியல் களம், கடந்த சில தினங்களாக சூடுபிடித்துள்ளது. இதற்கு காரணம் முதல்வர், காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்த 'டாபிக்' தான்.
இதனால் எரிச்சலடைந்த கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெலகாவியில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'மாநில தலைவர் மாற்றம் இல்லை' என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், 'அமைச்சர்கள் தங்களது வாயை மூடிக்கொண்டு வேலை செய்ய வேண்டும். முதல்வர், தலைவர் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். எங்களுக்கு யாரும் பாடம் கற்றுத் தர வேண்டிய அவசியமில்லை' என்று எச்சரித்தார்.
இந்நிலையில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களான ஆசிப் சைட், பாபா சாகேப், விஷ்வாஷ் வைத்யா, யாசிர் அகமது கான் பதான் உட்பட முதன்முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட 10 பேர் துபாய், சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல திட்டம் தீட்டியுள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக சுற்றுலா சென்று வர வேண்டும் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது. இவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் பொறுப்பை சதீஷ் ஜார்கிஹோளி தரப்பு ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''எம்.எல்.ஏ.,க்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பது பற்றி, என்னிடம் எந்த தகவலும் இல்லை. மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலாவிடம் தான் கேட்க வேண்டும்,'' என்றார்.
கடந்த 2023 மைசூரு தசராவின்போது, சதீஷ் ஜார்கிஹோளி தன் ஆதரவாளர்களுடன் பெங்களூரிலிருந்து மைசூரு சென்று, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.