ADDED : மார் 02, 2024 01:03 AM
புதுடில்லி,:டில்லி மெஹ்ராலியில் நாளை வரை நடக்கும் சத்சங்க நிகழ்ச்சியால், பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி பதிமைன்ஸ் சாலையில் உள்ள ராதா சோமி சத்சங் வளாகத்தில், சத்சங்கம் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. நாளை நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு புதுடில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் உட்பட தேசிய தலைநகர் பகுதிகள், அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றில் இருந்து மூன்று லட்சம் பேர் பங்கேற்பர் என, டில்லி மாநகரப் போலீசார் கணித்துள்ளனர்.
எனவே, தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பதிமைன்ஸ் சாலை, மெஹ்ராலி -- பதர்பூர் சாலை, தேரா சாலை, சத்தர்பூர் பிரதான சாலை, அனுவ்ரத் மார்க், அப்துல் கபார் கான் மார்க், அந்தேரியா மோர் மற்றும் மெஹ்ராலி - -குருகிராம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து மாற்றம் செய்யபப்ட்டுள்ளது.
பரிதாபாத் மற்றும் குர்கானில் இருந்து வருவோர், தேரா எல்லை வழியாக ராதா சோமி சத்சங் வளாகத்தை அடையலாம்.
பதிமைன்ஸ் சாலை, பந்த் சாலை, சத்தர்பூர் சாலை மற்றும் எஸ்.எஸ்.என்.மார்க் ஆகிய இடங்களில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படும். பொதுமக்கள் கூடுமானவரை வாகனப் போக்குவரத்தை தவிர்த்து, மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த வேண்டும் என, டில்லி மாநகர போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

