சுதந்திர போராட்டத்தை நினைவுகூரும் சத்தியாகிரஹ சவுதா
சுதந்திர போராட்டத்தை நினைவுகூரும் சத்தியாகிரஹ சவுதா
ADDED : மே 16, 2024 04:29 AM

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த, தியாகிகளின் போராட்டம் இன்றும் நினைவுகூரத்தக்கது. சுதந்திர போராட்டம் எப்படி இருந்தது என்பது பற்றி அறிய, இன்றைய தலைமுறைக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அவர்கள் செல்ல வேண்டிய இடமாக சத்தியாகிரஹ சவுதா உள்ளது.
மாண்டியாவின் மத்துார் தாலுகாவில் உள்ளது சிவபுரா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டவர்கள். கடந்த 1938ல் கர்நாடகாவின் பல பகுதிகளில் நினைவு சின்னங்கள், சாலைகளுக்கு ஆங்கிலேயர்கள் பெயர் சூட்டப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் நடந்த மகாத்மா காந்தி அழைப்பு விடுத்து இருந்தார்.
இதன்படி, சிவபுரா கிராமத்தில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. சுமார் 40,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆங்கிலேய போலீஸ்காரர்கள் திணறினர். ஏதாவது பெரிய பிரச்னை நடக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் எந்த பிரச்னையும் செய்ய கூடாது. அமைதியான முறையில் போராட வேண்டும் என்று, மகாத்மா காந்தி அழைப்பு விடுத்ததால் எந்த பிரச்னையும் நடக்கவில்லை. ஆனாலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1974ல் சிவபுரா கிராமத்தில், சுதந்திர போராட்டத்தை நினைவுகூரும் வகையில், சத்தியாகிரஹ சவுதா என்ற பெயரில் கட்டடம் கட்டப்பட்டது. அந்த கட்டடத்திற்குள் சுதந்திர போராட்டத்தை குறிக்கும் வகையிலான, புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அந்த புகைப்படங்களை பார்த்து, சுற்றுலா பயணியர், மக்கள் மெய்சிலிர்த்து போகின்றனர். தற்போது அந்த கட்டடம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.
பொதுப்பணி, தோட்டகலைத் துறை இணைந்து, கட்டடத்தை பராமரித்து வருகிறது. ஆனாலும் இங்கு மேலும் சில அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று, சுற்றுலா பயணியர் கோரிக்கை வைக்கின்றனர். இந்த கட்டடத்தை சுற்றி பார்க்க கட்டணம் இல்லை. காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து மத்துார் 81 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. இங்கிருந்து சத்தியாகிரஹ சவுதாவுக்கு, 7 கிலோ மீட்டர் துாரம் ஆகும். பெங்களூரில் இருந்து ரயில், பஸ்சில் செல்பவர்கள், மத்துாரில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும்.
***
- நமது நிருபர் -