சைபர் தாக்குதலால் தரவுகள் கசிவு எஸ்.பி.ஐ., நிர்வாகம் விளக்கம்
சைபர் தாக்குதலால் தரவுகள் கசிவு எஸ்.பி.ஐ., நிர்வாகம் விளக்கம்
UPDATED : அக் 23, 2026 10:44 PM
ADDED : அக் 23, 2026 10:40 PM
மும்பை: சைபர் தாக்குதலால், வாடிக்கையாளர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்த நிலையில், வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை பாதுகாப்பாக உள்ளது என, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் தகவல் அனுப்பி உள்ளது.
நம் நாட்டின் பிரதான தேசிய வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ., வங்கியின், 3,897 வாடிக்கையாளர்களின் தரவுகளை, ‘ஹேக்கர்’ குழு, ‘டார்க் வெப்’ எனப்படும் சட்டவிரோத தளங்களில் வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதை, எஸ்.பி.ஐ., நிர்வாகமும் உறுதி செய்தது. இது, வங்கி வாடிக்கையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களின் இ – மெயில் மற்றும் வாட்ஸாப் மூலம் எஸ்.பி.ஐ., நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து எஸ்.பி.ஐ., நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
இந்தத் தரவு கசிவால், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள பணத்திற்கோ அல்லது வங்கியின் நிதி பர்வர்த்தனைப் பாதுகாப்பு அமைப்புகளுக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை. இதேபோல், வங்கியின் அடிப்படை செயல்பாடுகள் ரீதியாகவும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சைபர் பாதுகாப்பு தடுப்பு நெறிமுறைகள் உடனே செயல்படுத்தப்பட்டது. இந்தத் தரவு கசிவு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கண்டறிய, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் பாதுகாப்பு ஏஜென்சி மூலம் தடயவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி மோசடி செய்வோர், போலியாகத் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களின் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் உள்ளிட்ட எண்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
