வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு ஒப்புக்கொண்டது எஸ்.பி.ஐ., நிர்வாகம்
வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு ஒப்புக்கொண்டது எஸ்.பி.ஐ., நிர்வாகம்
UPDATED : அக் 21, 2026 06:10 PM
ADDED : அக் 21, 2026 06:06 PM

மும்பை: எஸ்.பி.ஐ., வங்கியின், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், ‘டார்க் வெப்’ எனப்படும், ரகசிய இணையத்தில் கசிந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இணையவழி பண மோசடிகள் பெருகி வரும் நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து வங்கி விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இது குறித்து எஸ்.பி.ஐ., பங்குச்சந்தைக்கு வழங்கிய தகவலில் கூறியுள்ளதாவது:
எங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்கள், ‘டார்க் வெப்’பில் வெளியாகியுள்ளதாக அக்டோபர் 16ம் தேதி இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழுவிடம் இருந்து எச்சரிக்கை வந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ‘டார்க் வெப்’பில் கிடைத்த, 3.75 லட்சம் பதிவுகளில், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த தகவல்களில் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட, ‘மொபைல் போன்’ எண்கள், பிறந்த தேதி, பெயர், பாலினம், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி ஆகியவை அடங்கும். மேலும், வங்கிக் கிளை மற்றும் வாடிக்கையாளர் அடையாள எண்கள், கடன் மற்றும் கடன் விண்ணப்பங்கள் தொடர்பான பதிவுகளின் விபரங்கள், அவற்றுடன் தொடர்புடைய பிற கோப்புகளின் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
கசிந்த தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் முழுமையை உறுதி செய்யும் விசாரணை நடக்கிறது. வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் மதிப்பீடு செய்யப்படுகிறது.
வங்கி உடனடியாக இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளையும், பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளையும் செயல்படுத்தியது. மேலும், இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழுவின் அங்கீகாரம் பெற்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று, இந்தச் சம்பவத்தின் தன்மை மற்றும் பாதிப்பின் அளவை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள் எவ்வித இடையூறுமின்றி வழக்கம்போல் நடக்கின்றன. வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதி சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
