மாற்று மதத்தினரின் எஸ்.சி., சான்றிதழ்... ரத்து செய்யப்படும்! மஹாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு
மாற்று மதத்தினரின் எஸ்.சி., சான்றிதழ்... ரத்து செய்யப்படும்! மஹாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு
ADDED : ஜூலை 18, 2025 11:56 PM

மும்பை,: “ஹிந்து, பவுத்தம், சீக்கிய மதத்தினரை தவிர பிற மதத்தினர் முறைகேடாக எஸ்.சி., ஜாதி சான்றிதழ் பெற்றிருந்தால் அது ரத்து செய்யப்படும். அரசுப்பணி உட்பட பிற இடஒதுக்கீட்டு சலுகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் எச்சரித்துள்ளார்.
கிறிஸ்துவ மதத்தை தழுவிய சிலர் ஹிந்துக்கள் எனக் கூறிக்கொண்டு, பெயரை மாற்றாமல் அரசின் சலுகைகளை பெற்று வருகின்றனர். இதனால், சமூகத்தில் உண்மையாக பின்தங்கிய சிலருக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை.
இப்படி அரசின் சலுகைக்காக, கிறிஸ்துவர்கள் என்பதை மறைப்பவர்கள், 'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' என அழைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்த 'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' விவகாரத்தை மஹாராஷ்டிர சட்டசபையில் பாஜ., - எம்.எல்.ஏ., அமித் கோர்கே எழுப்பினார். அப்போது, மத சுதந்திரத்தை, 'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' தவறாக பயன்படுத்தி வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதில் அளித்து பேசியதாவது:
எஸ்.சி., ஜாதி பிரிவுகளுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் ஹிந்து, பவுத்தம், சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என, கடந்த 2024, நவ., 26ல் உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி ஹிந்து, பவுத்தம், சீக்கிய மதத்தினர் அல்லாதோர் எஸ்.சி., ஜாதி சான்றிதழை முறைகேடாக பெற்றிருந்தால், அவர்களுக்கான சலுகைகள் பறிக்கப்படும். சான்றிதழும் ரத்து செய்யப்படும். அரசு வேலை உள்ளிட்ட பலன்களை பெற்றிருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முறைகேடாக பெற்றிருந்த ஜாதி சான்றிதழை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அது செல்லாததாக அறிவிக்கப்படும். ஒருவர் எந்த மதத்தையும் தழுவலாம். அதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அதேபோல் முழு சம்மதத்துடன் ஒருவரை மதமாற்றமும் செய்யலாம்.
ஆனால், வற்புறுத்தியோ, மோசடி செய்தோ, ஆசை காண்பித்தோ மதமாற்றம் செய்வது குற்றம். இதை சட்டமும் அனுமதிக்காது. வற்புறுத்தி மதமாற்றம் செய்யப்பட்டதாக புகார்கள் வந்தால் விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
மேலும் சம்பந்தப்பட்ட அமைப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதிரியான வழக்குகளை விசாரிக்க, டி.ஜி.பி., தலைமையில் தனி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.