அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின்: ரத்து செய்யக்கோரிய சீராய்வு மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின்: ரத்து செய்யக்கோரிய சீராய்வு மனு தள்ளுபடி
UPDATED : டிச 21, 2024 10:49 PM
ADDED : டிச 21, 2024 09:48 PM

புதுடில்லி: அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தமிழக போலீசார் வழக்கு பதிந்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு கைது செய்தனர். பல மாதங்களாக சிறையில் இருந்த அவருக்கு கடந்த செப்டம்பர் 26ல் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து அவர் மின்சார துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், செந்தில்பாலாஜிக்கு எதிராக புகார் அளித்தவர்கள், ஜாமினை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து இருந்தனர்.இதனை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ் ஒகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசியா ஆகியோர் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பு கடந்த 17 ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு தற்போது, சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளதாவது: மறு சீராய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. செப்., 26 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும், தொடர்புடைய ஆவணங்களையும் ஆய்வு செய்ததில், தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த காரணமும் இல்லை. ஜாமினுக்கு எதிராக தொடரப்பட்ட மற்றொரு வழக்கு விசாரணையில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

