கொலை வழக்கை விசாரித்து முடிக்க 40 ஆண்டுகளா? உச்ச நீதிமன்றம் அதிருப்தி
கொலை வழக்கை விசாரித்து முடிக்க 40 ஆண்டுகளா? உச்ச நீதிமன்றம் அதிருப்தி
ADDED : ஜூன் 09, 2026 07:30 PM

-டில்லி சிறப்பு நிருபர்-
கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நபர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிவு எடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் 40 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்டதற்கு உச்ச நீதிமன்றம் கவலையையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க என்னென்ன புது உத்திகளை கையாளலாம் என கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த விஜய் சிங் என்பவர், தன் சகோதரரை சுட்டுக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு, 1983 நவம்பரில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 28. இந்த கொலை வழக்கை விசாரித்த கான்பூர் விசாரணை நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து 1985, டிசம்பரில் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து விஜய் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். எனினும், இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 41 ஆண்டுகளாக விசாரிக்காமல் அலகாபாத் உயர் நீதிமன்றம் நிலுவையிலேயே வைத்து இருந்தது.
ஒருவழியாக கடந்த பிப்., 9ம் தேதி விஜய் சிங்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, 20 பக்க தீர்ப்பு வழங்கியது. கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதை சுட்டிக்காட்டி விஜய் சிங் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அதில், 'தற்போது எனக்கு 72 வயதாகிறது. என் இளமை, நடுத்தர வயது, தற்போதைய முதிய வயது என ஒட்டுமொத்த வாழ்க்கையையும் குற்றவாளி என்ற நிழலிலேயே கழித்து வருகிறேன். அந்த அளவுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு, கடைசியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டு இருந்தார்.
அவரது மனு, உச்ச நீதிமன்றத்தின் கோடைகால அமர்வு நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் சந்துர்கர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கொலை வழக்கில், மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க 41 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது கவலையை ஏற்படுத்துகிறது. தேங்கி கிடக்கும் வழக்குகளால், நீதி பரிபாலனத்தில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற என்னென்ன உத்திகளை கையாள வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையின்போது, விஜய் சிங் மூன்று மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்ததையும், அதன் பின் 43 ஆண்டுகளாக ஜாமினில் இருந்தபடி மேல்முறையீட்டு வழக்கை நடத்தி வந்ததையும் நீதிபதிகள் கவனித்தனர். எனவே, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து முடிக்கும் வரை அவரது ஜாமினை நீட்டிப்பதாக உத்தரவிட்டனர்.
தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே மற்றும் வழக்கறிஞர் ஜோஹெப் ஹுசைன் யோசனைகளை முன்வைத்தனர். குறிப்பாக '30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை தள்ளுபடி செய்யலாம்' என சித்தார்த் தவே யோசனை தெரிவித்தார்.
ஆனால், இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். 'நிலுவையில் இருப்பதை மட்டுமே காரணம் காட்டி, வழக்கை தள்ளுபடி செய்வதை சட்டம் அனுமதிக்காது. அப்படி செய்வது இருதரப்பு நியாயங்களை அறியும் வாய்ப்பை மறுப்பதாக அமைந்துவிடும்' என தெரிவித்தனர்.
