100 நாள் திட்டத்தில் மோசடி: விருதுநகரில் ரூ.34 கோடி இழப்பு
100 நாள் திட்டத்தில் மோசடி: விருதுநகரில் ரூ.34 கோடி இழப்பு
UPDATED : நவ 03, 2024 11:39 AM
ADDED : நவ 03, 2024 11:08 AM

புதுடில்லி: மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடக்கும் 100 நாட்கள் வேலை திட்டத்தில் மூன்று மாநிலங்களில் நடந்த மோசடி காரணமாக ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டது அம்பலம் ஆகி உள்ளது. அதில் விருதுநகரில் மட்டும் 34.02 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் உள் தணிக்கைக்குழு, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களில் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்து உள்ளது.
அதில், 2023-24ம் நிதியாண்டில் இந்த திட்டத்தில், பல்வேறு முறைகேடுகள் காரணமாக 3 மாநிலங்களில் ரூ.35.37 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
அதில், தமிழகத்தின் விருதுநகரில் ரூ.34.02 கோடியும் ராஜஸ்தானின் நகாவூரில் ரூ.1.09 கோடியும் ம.பி.,யின் மொரினாவில் ரூ.26 லட்சமும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்த உள் தணிக்கை குழுவானது, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட 92 பணிகளையும் ஆய்வு செய்துள்ளது.
அதில்,மணிப்பூரில் பெர்ஜவால் மாவட்டத்தில் பிரதமர் கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டம் அமல்படுத்தப்பட்டதில் ரூ.5.20 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனுடன் மேற்கண்ட இரண்டு திட்டங்கள் மற்றும் பிரதமர் கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் பணம் அனாவசியமாகவும், சட்டவிரோதமாகவும் செலவு செய்யப்பட்டு உள்ளது. குஜராத், சிக்கிம், மணிப்பூர், ஒடிசா, கேரளா, ஹிமாச்சல பிரதேசம், மிசோரம், ஆந்திரா, அசாம், ம.பி., ராஜஸ்தான் மற்றும் பீஹார் மாநிலங்களில் ரூ.15.20 கோடி தேவையின்றி செலவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2022 - 23 நிதியாண்டில் இந்த திட்டங்களின் கீழ் ரூ.23.17 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்ததை இந்தக் குழு கண்டுபிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.