பயமா...? எனக்கா...? 'நெவர்' என்கிறார், சித்தராமையா!
பயமா...? எனக்கா...? 'நெவர்' என்கிறார், சித்தராமையா!
UPDATED : செப் 27, 2024 04:18 PM
ADDED : செப் 27, 2024 03:12 PM

மைசூரு: '' எதிர்க்கட்சிகள் தான் என்னை கண்டு பயப்படுகின்றனர். அரசியல் ரீதியாக புனையப்பட்ட வழக்கை கண்டு எனக்கு பயமில்லை,'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் மீது விசாரணை நடத்துவதற்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். இந்த அனுமதியை ரத்து செய்ய கோரி முதல்வர் தாக்கல் செய்த வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், முதல்வர், அவரது மனைவி, மைத்துனர் மல்லிகார்ஜுனா, நில விற்பனையாளர் தேவராஜ் ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, மைசூரு லோக் ஆயுக்தா போலீசுக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக மைசூரு விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய சித்தராமையா கூறியதாவது: பா.ஜ.,வும் ம.ஜ.த.,வும் என்னை கண்டு பயப்படுகின்றன. இதனால் தான் என்னை மீண்டும் மீண்டும் குறி வைக்கின்றனர். இந்த வழக்கு அரசியல் ரீதியில் புனையப்பட்டது. எனக்கு பயம் ஏதும் கிடையாது.
நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என சொல்லுங்கள். பதவியை ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது அரசை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் செய்கின்றனர். நாங்கள் அரசியல்சாசனத்திற்கு எதிராக செயல்படவில்லை. வழக்கறிஞர் மூலம் இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன்.
லோக் ஆயுக்தாவை நாங்கள் மூடவில்லை. பா.ஜ.,வினரால், ' லோட்டஸ் தாமரை'யை செயல்படுத்த முடியவில்லை. இதனால், எனக்கு எதிராக செயல்படுகின்றனர். பா.ஜ., அல்லாத அரசுகள் உள்ள மாநிலங்களில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.