8 வயது மாணவி பலாத்காரம் வாலிபர், பள்ளி மேலாளர் கைது
8 வயது மாணவி பலாத்காரம் வாலிபர், பள்ளி மேலாளர் கைது
ADDED : பிப் 07, 2025 04:55 AM
ராய்ச்சூர்: பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவரையும், முன்பின் தெரியாதவர்களுடன் அனுப்பி வைத்த பள்ளி மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.
ராய்ச்சூர் மாவட்டம், மான்வியை சேர்ந்த தம்பதியின் 8 வயது மகள், தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில், பள்ளி வாகனத்தில் சென்றார். மதியம், அம்மாணவி வசிக்கும் பகுதியை சேர்ந்த நபர் பள்ளிக்கு வந்து, அவரது தாயார் குழந்தையை அழைத்து வர கூறியதாக தெரிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்தினரும் மாணவியை அனுப்பி வைத்துள்ளனர். அந்நபரோ, மாணவியை அருகில் கட்டப்பட்டு வரும் கட்டடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின், மாலையில் பள்ளி முடியும் நேரத்தில் மாணவி வசிக்கும் பகுதியில் விட்டு, விட்டு நடந்த விஷயத்தை யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி உள்ளார். ஆனால், தாயிடம் நடந்த விஷயத்தை கூறிவிட்டார். அதிர்ச்சி அடைந்த தாயார், மகளை பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அத்துடன், மான்வி போலீசில் சம்பந்தப்பட்ட நபர் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அதே பகுதியை சேர்ந்த சிவனகவுடா, 35, அஜாக்கிரதையாக நடந்து கொண்ட பள்ளி நிர்வாக மேலாளர் ராஜு தலிகோட்டேயை கைது செய்தனர். இருவர் மீதும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மாணவியின் பெற்றோர் கூறுகையில், 'சம்பந்தம் இல்லாத வெளி நபருடன் எப்படி குழந்தையை அனுப்பி வைத்தனர். அஜாக்கிரதையாக இருந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். எங்கள் மகளுக்கு நடந்த சம்பவம் யாருக்கும் நடக்கக்கூடாது' என்றனர்.