ADDED : ஜன 04, 2025 11:34 PM

மும்பை: நம் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம், 88, உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்று காலமானார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்த சிதம்பரம், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டில், 1975 மற்றும் 1998ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்தவர் ராஜகோபால சிதம்பரம். 1936ல் சென்னையில் பிறந்தவர்.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தன் பணியை துவக்கினார். இந்தியாவுக்கான சூப்பர் கம்ப்யூட்டர்களை உள்நாட்டிலேயே உருவாக்கியதில் முதன்மை பங்காற்றியவர் சிதம்பரம்.
இவரது சேவையை போற்றும் வகையில், பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் உள்ளிட்ட பல உயரிய பதவிகளை சிதம்பரம் வகித்துள்ளார்.

