தினமும் தமிழ் நாளிதழ் வாங்குங்க விஞ்ஞானி டில்லி பாபு அறிவுரை
தினமும் தமிழ் நாளிதழ் வாங்குங்க விஞ்ஞானி டில்லி பாபு அறிவுரை
ADDED : மார் 16, 2025 11:30 PM

ராஜாஜி நகர்,: “அடுத்த தலைமுறையினரிடம் தமிழை கொண்டு சேர்ப்பதற்கு தினமும் ஒரு தமிழ் நாளிதழை வாங்குங்கள்,” என, ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு அறிவுரை வழங்கி உள்ளார்.
பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள வாசன் கண் மருத்துவமனையில், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மூன்றாம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் சிறப்புமலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
முதல் சிறப்பு மலரை டில்லி பாபு வெளியிட்டு பேசியதாவது:
இன்றைய நிலவரப்படி உலகில் 7,000 மொழிகள் உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்து உள்ளது. இரு வாரங்களுக்கு ஒரு மொழி அழிந்து வருகிறது. இதே நிலைமை தொடர்ந்தால், 21ம் நுாற்றாண்டின் இறுதியில், 3,000 மொழிகள் அழிந்துவிடும்.
தமிழ் என்பது வெறும் மொழி மட்டும் அல்ல. தமிழ் உணவு, உடை, மருத்துவம், விவசாயம் என வாழ்வியலாக உள்ளது. மொழி தான் ஒருவருக்கு அடையாளம். வாழ்க்கையை எப்படி வாழ்வது என அனைத்தையும் கற்று கொடுக்கிறது.
மாதம் ஒரு புத்தகம் வாங்குங்கள்; அந்த புத்தகத்தை படித்து முடித்ததும், மற்றொரு புத்தகத்தை வாங்குங்கள். படித்தால் வேலை கிடைக்கும், வாசித்தால் வாழ்க்கை கிடைக்கும்.
அப்துல் கலாமின் 'அக்னி சிறகுகள்' என்ற புத்தகம் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது. அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு சேர்ப்பதற்கு, தினமும் தமிழ் நாளிதழை வாங்குவது அவசியமாகும்.
புத்தக திருவிழாவை பத்திரிகையாளர்கள் நடத்தியது பாராட்டுக்குரியது. இன்றைய செய்தி, நாளைய வரலாறு என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளி நிறுவனர் மதுசூதனபாபு, பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், தமிழியக்கம் அமைப்புச் செயலர் வணங்காமுடி, கர்நாடக மாநில தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு சிறப்பு மலர் வழங்கப்பட்டது.