சிந்தியாக்கள் ஆங்கிலேயரின் நண்பர்கள்! காங்கிரஸ் பதிலடி
சிந்தியாக்கள் ஆங்கிலேயரின் நண்பர்கள்! காங்கிரஸ் பதிலடி
ADDED : ஜன 28, 2025 08:07 PM

புதுடில்லி:காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா கூறியதாவது:
அரசியலமைபுச் சட்டத்தின் 26வது பிரிவு திருத்தம் செய்யப்படாமல் இருந்திருந்தால்,  குவாலியர் அரச குடும்பத்துக்கு 25,00,000 கோடி ரூபாய் வரை வரிவிலக்கு கிடைத்திருக்கும். இந்தியாவுடன் இணைவதற்காக 1971ம் ஆண்டு வரை இந்தச் சலுகையை குவாலியர் அரசு அனுபவித்துள்ளது. அரச குடும்பங்களின் துரோகத்தையும், ஆங்கிலேயர்கள் மீதான அவர்களின் அன்பையும் ஜோதிராதித்ய சிந்தியா  மறந்து விட்டார். ஆனால், நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.
மஹாத்மா காந்தியை கொலை செய்ய அரச குடும்பத்தின் கைத்துப்பாக்கி பயன்படுத்த ப்பட்டதற்கு சாட்சி உள்ளது. பல அரச குடும்பங்களின் தவறான செயல்களை ஒரு சில மன்னர்களின் நன்னடைத்தையால் மறைக்க முடியாது.
ஜவஹர்லால் நேரு மற்றும் வல்லபாய் படேல் ஆகியோர் மன்னராட்சியை ஒழிக்க அழுத்தம் கொடுத்தனர். ஜனநாயக நாட்டில் ஆட்சியை சாதாரண குடிமக்களிடம் ஒப்படைத்ததால், சில அரச குடும்பங்களுக்கு இன்றும் வலிக்கிறது.
கடந்த 1947ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி அரசியல் நிர்ணய சபையில் பேசிய நேரு, 'எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் கடவுள் கொடுத்த பாக்கியத்தால் மனித குலத்தை ஆள் வந்தேன் எனக்கூறுவது மிகவும் கேவலம். இதை சகித்துக் கொள்ள முடியாது. இந்தச் சபை அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது'என்றார்.
மன்னர்களின் தெய்வீக உரிமையைப் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், நீண்ட காலத்துக்கு முன்பே அந்த தெய்வீக உரிமை புதைக்கப்பட்டு விட்டது. சிந்தியா பேசுவது இந்தியாவின் இன்றைய நிலைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. கவிஞர் சுபத்ரா குமாரி சவுகான் தன் கவிதை ஒன்றில், சிந்தியாக்கள் ஆங்கிலேயரின் நண்பர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்நடந்த பேரணியில் பேசியதாவது:
சுதந்திரத்துக்கு முன் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எந்த உரிமையும் இல்லை. அப்போது மஹா ராஜாக்கள் மற்றும் மன்னர்கள் மட்டுமே உரிமைகளை அனுபவித்தனர். நாடு சுதந்திரம் அடைந்த கையோடு மன்னராட்சியும் ஒழிக்கப்பட்டது. அதனால்தான் ஏழைகளுக்கும் நிலமும் உரிமையும் கிடைத்தது. ஆனால், சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவைத்தான்  பா.ஜ.,வும் -ஆர்.எஸ்.எஸ்.,சும் விரும்புகின்றன. சாமானியர்களுக்கு எந்த உரிமையும் இருக்கக் கூடாது என்பதுதான் பா.ஜ.,வின் எண்ணம். அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும் என நினைக்கிறது. கோடீஸ்வரர்களால் நாடு இயங்கும் போது ஏழைகள் அமைதியாக இருங்கள். லட்சியம், கனவு எல்லாம் ஏழைகளுக்கு தேவையில்லை என்கிறது பா.ஜ.,
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
அதிகாரம் மற்றும் பதவிக்கான பசியில் ராகுல் தவிக்கிறார். அரச குடும்பங்கள்தான் பண்டைய இந்தியாவில் சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது. இதை ராகுல் மறந்து விட்டார்.
பரோடா மஹாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட், அரசியலமைப்பை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கர் கல்வி கற்க நிதியுதவி  செய்தார். சத்ரபதி ஷாகுஜி மஹராஜ் 1902ம் ஆண்டு, பகுஜன்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்து சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தார்.
பின்தங்கிய வகுப்பினரை கல்வி ரீதியாக மேம்படுத்துவதற்காக, குவாலியரின் முதலாம் மாதவ் மஹராஜ், குவாலியர் -சம்பல் முழுவதிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையங்களைத் திறந்தார்.
சர்வாதிகார சித்தாந்தத்தை தோற்றுவித்த காங்கிரஸ் கட்சிதான் தலித்துகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை பறிக்கும் செயல்களை செய்தது. ராகுல் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, ராகுலுடன் மிக நெருக்கமாக இருந்தவர். கடந்த 2020ம் ஆண்டு காங்.,கில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தார். இதனால், மத்தியப் பிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 2020ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தது.

