எஸ்.ஐ., மறுதேர்வில் 54,000 பேர் தேர்வர்களின் சட்டையில் கத்திரிக்கோல்
எஸ்.ஐ., மறுதேர்வில் 54,000 பேர் தேர்வர்களின் சட்டையில் கத்திரிக்கோல்
ADDED : ஜன 24, 2024 06:01 AM

பெங்களூரு : பெங்களூரில் 117 தேர்வு மையங்களில் நடந்த, எஸ்.ஐ., மறுதேர்வை 54,000 பேர் எழுதினர். தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
முறைகேடு
கர்நாடகாவில் 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு, 2021ல் மாநிலம் முழுவதும் 57 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. 2022 பிப்ரவரியில் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தேர்வில் முறைகேடு நடந்தது தெரிந்தது.
பல்வேறு குழப்பங்களை கடந்து, நேற்று எஸ்.ஐ., மறுதேர்வு, அறிவிக்கப்பட்டபடி, பெங்களூரில் மட்டும் நடந்தது. இந்த தேர்வுக்காக 117 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. முதல் தேர்வு காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; இரண்டாவது தேர்வு மதியம் 1:00 மணி முதல் 2:30 மணி வரையும் நடந்தது. 150 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வை 54,000 தேர்வர்கள் எழுதினர்.
தேர்வு நடந்த மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களை சுற்றி, நகல் எடுப்பு கடைகள் மூடப்பட்டு இருந்தன.
தேர்வு மையங்களுக்கு காலை 7:00 மணிக்கே, தேர்வர்கள் வர ஆரம்பித்தனர். தேர்வு மையங்கள் முன்பு அமர்ந்து, மும்முரமாக படித்துக் கொண்டு இருந்தனர்.
சட்டைக்கு கத்திரிக்கோல்
ஆண் தேர்வர்கள் முழுக்கை சட்டை, ஜீன்ஸ் அணிந்து வர கூடாது என்று, கர்நாடகா தேர்வுகள் ஆணையம் முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தது. ஆனாலும் ஒரு சில மையங்களுக்கு ஆண் தேர்வர்கள், முழுக்கை சட்டை அணிந்து வந்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், கத்திரிக்கோலை எடுத்து சட்டையை வெட்டி, அரைக்கை சட்டையாக மாற்றினர்.
மாண்டியா, துமகூரு, மைசூரு, தாவணகெரே உள்ளிட்ட மத்திய கர்நாடகா மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், தேர்வு மையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த முறை தேர்வு நடந்தபோது, வடமாவட்டங்களில் அதிக முறைகேடுகள் நடந்ததால், அந்த பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.
எந்த பிரச்னையும் இன்றி, தேர்வு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

