பட்டியலின பிரிவில் உள் இடஒதுக்கீடு செல்லும்! சுப்ரிம்கோர்ட் அதிரடி
பட்டியலின பிரிவில் உள் இடஒதுக்கீடு செல்லும்! சுப்ரிம்கோர்ட் அதிரடி
ADDED : அக் 04, 2024 09:45 PM

புதுடில்லி; எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க அனுமதி அளிக்கும் உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரிம்கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
2009ம் ஆண்டு தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் வால்மீகி, மஜாபி சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதே போல பல மாநிலங்களிலும் உள் ஒதுக்கீடு அளித்து உத்தரவிடப்பட்டு இருந்தது.
உள் ஒதுக்கீட்டை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்து கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று ஆகஸ்ட் 1ம் தேதி சுப்ரிம்கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. இந்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த 7 நீதிபதிகளில் 6 பேர் உள் ஒதுக்கீடு செல்லும் என்று கூறி இருந்தனர்.
சுப்ரிம்கோர்ட் வழங்கிய இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை ஆய்வு செய்த 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறி உள்ளதாவது; அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று கூறினர்.

