மலம்புழாவில் கடல் விமான திட்டம்; அமைச்சர் முகமது ரியாஸ் தகவல்
மலம்புழாவில் கடல் விமான திட்டம்; அமைச்சர் முகமது ரியாஸ் தகவல்
ADDED : பிப் 18, 2025 09:44 PM

பாலக்காடு ; மாநிலத்தில் அணைகளைமையமாக கொண்டு கடல்விமானம் பறக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறினை ஆய்வு செய்து வருவதாகவும், இந்த திட்டத்தை மலம்புழா அணையில் செயல்படுத்துவதற்கு பரிசீலனை செய்துள்ளதாகவும், கேரள பொதுப்பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் சுற்றுலாத் துறையின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த பொதுப்பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
கேரள மாநிலத்தில், அணைகளை மையமாகக் கொண்டு கடல் விமானம் பறக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறினை ஆய்வு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தை மலம்புழா அணையில் செயல்படுத்துவதற்கு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
இது சாத்தியமானால், மலம்புழாவின் தோற்றமே மாறி விடும். கிராமப்புறக் காட்சிகளை காண்பதோடு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணியர் விரைவாக மலம்புழாவை அடைய முடியும். பாலக்காடு மாவட்டத்தின் மற்ற அணைகளை கூட, இந்தத் திட்டத்தில் உட்படுத்துவது குறித்து ஆலோசனை செய்வோம். இந்தத் திட்டம் உள்ளூர்வாசிகளுக்கு, வியாபாரம் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் துவங்க உதவியாக இருக்கும். பாலக்காட்டில் உள்ள சினிமா லொக்கேஷன்களை இணைத்து, சினிமா சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தவும் ஆலோசனை உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

