எம்.பி., மனைவிக்கு பா.ஜ.,வில் 'சீட்': அமைச்சர் மனைவியை நிறுத்துமா காங்.,?
எம்.பி., மனைவிக்கு பா.ஜ.,வில் 'சீட்': அமைச்சர் மனைவியை நிறுத்துமா காங்.,?
ADDED : மார் 14, 2024 10:12 PM

தாவணகெரே லோக்சபா தொகுதியில், இன்னாள் எம்.பி., சித்தேஸ்வரின் மனைவி காயத்ரியை பா.ஜ., களமிறக்கி உள்ளது. இவரை எதிர்த்து, பெண் வேட்பாளரை களத்தில் இறக்க, காங்கிரஸ் ஆலோசிக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., உட்பட மற்ற கட்சிகள் லோக்சபா தேர்தலுக்கு தயாராகின்றன. பா.ஜ., இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஏழு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள், தங்களின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் புடை சூழ, பம்பரமாக சுற்றி வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மற்ற தொகுதிகளுக்கு, காங்., வேட்பாளர்களை தேடி வருகிறது. தாவணகெரேவில், இன்னாள் எம்.பி., சித்தேஸ்வருக்கு பதிலாக, அவரது மனைவி காயத்ரிக்கு பா.ஜ., சீட் கொடுத்துள்ளது. எனவே இவரை எதிர்த்து, பெண் வேட்பாளரை களமிறக்க, காங்கிரசும் திட்டமிட்டுள்ளது.
தாவணகெரே லோக்சபா தொகுதியானதில் இருந்து, 2019 வரை பெண் வேட்பாளர்களுக்கு சீட் கிடைத்தது இல்லை. லோக்சபாவில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், தாவணகெரேவில் பெண் வேட்பாளரை பா.ஜ., அறிவித்துள்ளது.
இன்னாள் எம்.பி., சித்தேஸ்வர் மீது, தொகுதியில் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா உட்பட, பல தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். சித்தேஸ்வருக்கு சீட் கொடுக்க கூடாது என, பிடிவாதம் பிடித்தனர். இவருக்கு மாநில, தேசிய அளவில் செல்வாக்கு உள்ளது.
இவருக்கு சீட் மறுத்தால், கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்ற பீதியால், அவரது மனைவியை பா.ஜ., வேட்பாளராக்கியது. ரேணுகாச்சார்யா கோஷ்டியின் முயற்சி தோற்று விட்டது.
சித்ரதுர்காவில் இருந்து, தாவணகெரே தனியாக பிரிந்து, மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின், லோக்சபா தேர்தல் உட்பட, 12 தேர்தல் நடந்தது. ஆறு முறை காங்கிரஸ், ஆறு முறை பா.ஜ., வெற்றி பெற்றது.
இம்முறை காயத்ரி சித்தேஸ்வருக்கு எதிராக, சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனின் மனைவி பிரபா, காங்கிரஸ் வேட்பாளராகும் வாய்ப்புள்ளது.
- நமது நிருபர் -

