ADDED : மார் 15, 2024 10:51 PM
பீதர் லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால் ஆளுங்கட்சியான காங்கிரஸ் யாரை களமிறக்குகிறது என்பது இன்னும் தெரியவில்லை.
பலத்த இழுபறி
பீதர் தொகுதியில் பலத்த இழுபறி இருந்தும், அதை சமாளித்து மத்திய அமைச்சர் பகவந்த் கூபாவுக்கு, பா.ஜ., சீட் கொடுத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கட்சியில் குழப்பம் இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவை களமிறக்க, காங்கிரஸ் விரும்பியது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதன்பின் காங்., தலைவர் ராஜசேகர பாட்டீல் ஹும்னாபாத் பெயர் கூறப்பட்டது.
இதற்கிடையில் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவின் மகன் சாகர் கன்ட்ரேவின் பெயர் முன்னணியில் வந்துள்ளது. பீதரின் ஒவ்வொரு பகுதியிலும் சாகரின் பிளக்ஸ் பேனர் தென்படுகிறது.
முதல்வரின் அரசியல் ஆலோசகரான, எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல், தலைவர்கள் பசவராஜ் புள்ளா, அயுஜ்கான், அப்துல் மன்னான் சேட் உட்பட பலர் பீதரின் காங்., சீட் பெற முயற்சிக்கின்றனர்.
பின்னடைவு
கலபுரகி தொகுதியில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதா கிருஷ்ணாவை களமிறக்குவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
ஒருவேளை சாகர் கன்ட்ரேவுக்கு பீதரில் சீட் கொடுத்தால், குடும்ப அரசியல் செய்வதாக அவப்பெயர் ஏற்படும். இது இரண்டு தொகுதிகளிலும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே எச்சரிக்கையுடன் வேட்பாளரை தேர்வு செய்ய, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ராஜசேகர் பாட்டீல் ஹும்னாபாத்துக்கு சீட் கொடுக்க, முதல்வர் சித்தாரமையா, மல்லிகார்ஜுன கார்கே ஆர்வம் காண்பிக்கின்றனர்.
மற்றொரு பக்கம் ஈஸ்வர் கன்ட்ரே, தன் மகன் சாகருக்கு சீட் பெற முயற்சிக்கிறார். எனவே ராஜசேகர் பாட்டீல் ஹும்னாபாத் அல்லது சாகர் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் வாய்ப்புள்ளது- நமது நிருபர் -.
