ADDED : டிச 10, 2024 07:28 AM

பெலகாவி: பெலகாவியில் சுவர்ண விதான் சவுதாவில், முன்னாள் முதல்வர்களுக்கு இருக்கை ஒதுக்கி, பெலகாவி மாவட்ட நிர்வாகம் குளறுபடி செய்துள்ளது.
பெலகாவியின், சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபை நேற்று துவங்கியது. இதில் பங்கேற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இருக்கை வசதி செய்துள்ளது. ஆனால் எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கும், இருக்கை ஒதுக்கி சர்ச்சைக்கு காரணமானது.
நடப்பாண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பசவராஜ் பொம்மை, ம.ஜ.த.,வின் குமாரசாமி வெற்றி பெற்று எம்.பி.,க்களாகினர். ஆனால் இவர்களை எம்.எல்.ஏ.,க்கள் என, குறிப்பிட்டு இவர்களின் பெயரிலேயே, இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஷிகாவி, சண்டூர், சென்னப்பட்டணா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்களான யாசிர் அகமது பதான், அன்னபூரணி, யோகேஸ்வர் நேற்று பதவியேற்றனர்.
புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு இருக்கை வசதி செய்திருக்க வேண்டும். ஆனால் பெலகாவி மாவட்ட நிர்வாகம், இவர்களுக்கு பதிலாக எம்.பி.,க்கள் பசவராஜ் பொம்மை, குமாரசாமிக்கு இருக்கை வசதி செய்துள்ளது. தவறை உணர்ந்த அதிகாரிகள், புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு இருக்கை வசதி செய்தனர்.

