ஒரு தொகுதிக்கு பலர் போட்டி!
வரும் லோக்சபா தேர்தல்ல, பெங்களூரு மத்திய தொகுதி மேல, கை கட்சிக்காரங்க நிறைய பேரு, கண் வச்சி இருக்காங்களாம். அந்த தொகுதிய சிறுபான்மையினருக்கு தான் கொடுக்கனும்ன்னு, மேலிட தலைவர்ங்க முடிவு பண்ணிருக்காங்க. இதனால சிறுபான்மை சமூக அமைச்சரு, கை கட்சியோட இளைஞர் அணி தலைவர்ன்னு பட்டியல் நீண்டுகிட்டே போகுதாம். தங்களுக்கு தெரிஞ்ச பெரிய தலைக்கட்டுக மூலமா, 'சீட்'டுக்கு இப்போ இருந்தே அடி போட ஆரம்பிச்சி இருக்காங்களாம். யாரு கை ஓங்கும்னு, இன்னும் சில மாசத்துல தெரிஞ்சுரும்.
தாமரையை மிரட்டிய மடாதிபதி!
கர்நாடகா தாமரை கட்சிக்கு எதிரா, அந்த கட்சியோட வடமாவட்ட எம்.எல்.ஏ., ஒருத்தரே பேசிட்டு வர்றாரு. அவருக்கு மடாதிபதி ஒருத்தரோட சப்போர்ட் இருக்கு. எம்.எல்.ஏ.,வுக்கு போன ஆட்சியில, அமைச்சர் பதவி கிடைச்சி இருக்க வேண்டியது. எதிர்க்கட்சித் தலைவரு பதவியும் கைய விட்டு நழுவி இருக்கு. சதி செய்யுறீங்கன்னு, தாமரை கட்சி தலைவர்கள நேரடியாவே சாடி இருக்காரு மடாதிபதி. எம்.எல்.ஏ., மேல ஏதாவது நடவடிக்கை எடுத்தீங்கன்னா, லோக்சபா தேர்தல்ல நாங்க யாருன்னு காட்டுவோம்னு, மடாதிபதி எச்சரிச்சி இருக்காராம்.
வாக்குறுதி மறந்த எம்.எல்.ஏ.,
சர்க்கரை மாவட்டத்துல விவசாய கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தரு இருக்காரு. அவரோட குடும்பம் வெளிநாட்டுல இருக்கு. தேர்தலுக்கு முன்னாடி, 'நான் ஜெயிச்சா வெளிநாட்டுக்கு போக மாட்டேன்னு' சொன்னாரு. ஆனா ஜெயிச்சதுக்கு அப்புறம் சொன்னதுக்கு நேர்மாறா நடந்துட்டு வர்றாரு. ஏழு மாசத்துல நாலு தடவ, வெளிநாட்டுக்கு போயிட்டாரு. இப்போ கூட வெளிநாட்டுல தான் இருக்காரு. எந்த அரசியல்வாதி தான் சொன்னபடி நடந்துட்டு இருக்காங்க. எல்லாம் நம்ம தலையெழுத்துன்னு, எம்.எல்.ஏ.,வ நெனைச்சு தொகுதி மக்கள் நொந்துக்குறாங்க.