முதல்வரின் குழப்பம்!
கர்நாடகா சமூக நலத் துறை அமைச்சரும், முதல்வரும் அரண்மனை மாவட்டத்துக்காரங்க. இரண்டு பேரும் தோஸ்த் வேற. வர்ற லோக்சபா தேர்தல்ல, சாம்ராஜ்நகர் தொகுதி 'சீட்'டை மகனுக்கு வாங்கி கொடுத்துடலாம்னு, அமைச்சரு கணக்கு போட்டு இருந்தாரு. ஆனா திடீர்னு கை கட்சி மாநில மகளிர் அணி தலைவி, எனக்கு சாம்ராஜ்நகர் 'சீட்' கொடுங்கன்னு கேட்டு இருக்காங்க. இவங்களும் அரண்மனை மாவட்டத்துக்காரங்க. நண்பன் மகனுக்காக, மகளிர் அணி தலைவிக்கா, யாருக்கு 'சீட்' கொடுக்குறதுன்னு, முதல்வரு குழப்பத்துல இருக்குறாராம்.
உள்ளடி வேலை நடந்துருக்கு!
தாமரை கட்சி எம்.எல்.ஏ., எத்னாலு, விஜயபுரா மாவட்டமே என்னோட கட்டுப்பாட்டுல இருக்குன்னு, பெருமை பேசிட்டு வந்தாரு. ஆனா தாமரை கட்சி வசம் வர இருந்த, விஜயபுரா மாநகராட்சிய கோட்டை விட்டு இருக்காரு. ஓவரா பேசுனா இது தான் நிலைமைன்னு, சொந்த கட்சிக்காரங்களே அவர கிண்டல் பண்ணிட்டு வர்றாங்க. இது தான் நல்ல சாக்குன்னு, எத்னால பத்தி மேலிடத்துல போட்டு கொடுக்க, அவரோட எதிர்ப்பாளர்கள் ரெடி ஆகிட்டு வர்றாங்க. மாநகராட்சி தேர்தல்லயும் உள்ளடி வேலை நடந்துருக்குன்னு, எத்னாலு புலம்பிட்டு வர்றாராம்.
எதிரிகளை நண்பராக்க முயற்சி!
அரசியல்ல நிரந்தர நண்பனும் இல்ல, எதிரியும் இல்லன்னு சொல்லுவாங்க. அது யாருக்கு பொருந்துமோ இல்லயோ, புல்லுக்கட்டு குமரண்ணருக்கு நல்லா பொருந்தும். கை கட்சி கூட கூட்டணி வைச்சு முதல்வரா இருந்த அப்போ, தாமரை கட்சிய விமர்சனம் செஞ்சு பேசுனாரு. இப்போ தாமரை கட்சி கூட சேர்ந்துகிட்டு, கை கட்சிக்காரங்க வசைபாடிட்டு வர்றாரு. இதுதவிர தாமரை கட்சியில இருக்குற, தன்னோட அரசியல் எதிரிகள, தேடி போயி பேசுறாரு. எதிரிகள, நண்பராக்க முயற்சி பண்ணுறாரு. 'அரசியலுக்காக என்னவெல்லாம் பண்ணுறாரு பாருங்க'ன்னு காங்கிரசார் கலாய்க்கிறாங்க!

