சித்தப்பாவுக்கு அழுத்தம்!
லோக்சபா தேர்தல்ல உருளை மாவட்ட தலைநகர் தொகுதியில, புல்லுக்கட்டு வேட்பாளரா மறுபடியும் போட்டியிடுவதற்கு, தற்போதைய எம்.பி. தயாராகிட்டு வர்றாரு. ஆனா அவரு போட்டியிட, கூட்டணியில இருக்குற தாமரை கட்சிக்காரங்க, எதிர்ப்புத் தெரிவிச்சிட்டு வர்றாங்க. இதனால எம்.பி. அப்செட்ல இருக்காரு. இந்நிலையில தன்னோட சித்தப்பாவான குமரண்ணர சந்திச்சு, உங்க கூட தாமரை கட்சிக்காரங்க நட்பா இருக்காங்க. அவங்க கிட்ட பேசி, எனக்கு எதிர்ப்பு தெரிவிக்காம பார்த்துகோங்கன்னு, அழுத்தம் கொடுத்துட்டு வர்றாராம்.
'சீட்' கிடைக்க வாய்ப்பு!
லோக்சபா தேர்தல்ல, பெங்களூரு வடக்கு தொகுதி 'சீட்'டுக்கு, கை கட்சியில கடும் போட்டி கிளம்பி இருக்கு. இந்த லிஸ்டுல, மறைந்த ஐ.ஏ.எஸ். மனைவியும் இணைஞ்சி இருக்காங்க. அவங்களும் எனக்கு தான் 'சீட்' வேணும்னு பிடிவாதம் பிடிக்குறாங்களாம். பெங்களூரு ரூரல் கை கட்சியோட எம்.பி.யோட ஆதரவும், அவங்களுக்கு இருக்காம். எம்.பி.யோட அண்ணன் தான், துணை முதல்வராகவும், மாநில தலைவராவும் இருக்காரு. இதனால ஐ.ஏ.எஸ். மனைவிக்கு 'சீட்' கிடைக்க அதிக வாய்ப்பு இருக்குன்னு, கட்சிக்குள்ள பேசுறாங்க.
முன்னாள் அமைச்சர் மேல கடுப்பு!
வெண்ண மாவட்டத்த சேர்ந்த, தாமரை கட்சி முன்னாள் அமைச்சரு ஒருத்தரு, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவோட தீவிர ஆதரவாளரு. இதனால வர்ற லோக்சபா தேர்தல்ல, வெண்ண மாவட்ட தலைநகரு தொகுதி, 'சீட்' எதிர்பார்க்குறாரு. ஆனா அவருக்கு வாய்ப்பு கொடுக்க, கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி இருக்கு. தனக்கு எதிர்ப்பு தெரிவிக்குறவங்கள பத்தி, முன்னாள் அமைச்சரு பொது இடத்துல, வாய்க்கு வந்தபடி பேசிட்டு வர்றாராம். இதனால அவரோட எதிர்ப்பாளர்கள் கடுப்புல இருக்காங்க. நேரம் வரும்போது அவரோட பழிவாங்க எதிர்பார்த்துட்டு இருக்காங்க.