எம்.பி.,க்கு கடும் எதிர்ப்பு!
கர்நாடகா தாமரை கட்சி முன்னாள் தலைவரு, கடலோர மாவட்ட தலைநகரு தொகுதி எம்.பி.யாக இருக்காரு. வர்ற லோக்சபா தேர்தல்ல போட்டியிட ரெடி ஆகிட்டு வர்றாரு. ஆனா அவருக்கு 'சீட்' கொடுக்க, கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கு. தொண்டர்கள மதிக்கவே மாட்டாங்குறார்னு, அவரு மேல குற்றச்சாட்டு எழுந்து இருக்கு. இதனால அவருக்கு 'சீட்' கிடைக்குறது, டவுட்னு கட்சிக்குள்ளேயே பேச ஆரம்பிச்சி இருக்காங்க. ஹிந்து அமைப்பு தலைவரு ஒருத்தரும், கடலோர மாவட்ட தாமரை கட்சி இளம் தலைவர் ஒருத்தரும், 'சீட்'டுக்கான போட்டியில இருக்காங்களாம்.
கை தலைவர்களுக்கு பயம்!
தாமரை கட்சியில இருந்து, கை பக்கம் போன முன்னாள் முதல்வரு, மறுபடியும் தாய் கட்சிக்கே வந்து இருக்காரு. இவர் மூலமா கை கட்சியில இருக்குற லிங்காயத் எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, தாமரை கட்சிக்காரங்க 'பிளான்' போட்டு இருக்காங்களாம். கை கட்சிக்காரங்க தான், தாமரை கட்சிக்காரங்கள இழுக்க பார்த்தாங்க. ஆனா எதுவும் நடக்கல. போற போக்க பார்த்தா, கை கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தாமரை பக்கம் தாவிருவாங்க போல. இதனால கை கட்சி தலைகட்டுகளுக்கு பயம் வந்துருக்கு. இனி எச்சரிக்கையா செயல்பட ரெடி ஆகிட்டு வர்றாங்க.
மீண்டும் துளிர்விட்ட ஆசை!
போன லோக்சபா தேர்தல்ல, சர்க்கரை மாவட்ட தலைநகர்ல, முன்னாள் முதல்வரு குமரண்ணரு மகனும், நடிகருமான நிகில் தோத்து போனாரு. சட்டசபை தேர்தல்லயும் தோத்தாரு. இனிமே மகன் தேர்தல்லயே போட்டியிட மாட்டார்னு, குமரண்ணரு சொன்னாரு. ஆனா வர்ற தேர்தல்ல நீங்க போட்டியிடணும்னு, நடிகருக்கு, புல்லுக்கட்டு கட்சிக்காரங்க அழுத்தம் கொடுத்துட்டு வர்றாங்களாம். இந்த முறை எப்படியாவது ஜெயிக்க வைச்சுருவோம்னு, ஆசை காட்டுறாங்களாம். இதனால நடிகருக்கு எம்.பி., ஆசை துளிர்விட்டு இருக்காம்.

