ஜாதி தான் முக்கியமா போச்சு!
கர்நாடகா கைக்கட்சியில 92 வயசு எம்.எல்.ஏ., ஒருத்தரு இருக்காரு. இவரோட மகன் தோட்டக்கலை துறை அமைச்சர். வர்ற லோக்சபா தேர்தல்ல, ஷிவமொகாவுல தொகுதியில, எடியூரப்பா மகன் மறுபடியும் ஜெயிக்கணும்னு, வயசான எம்.எல்.ஏ., ஆசிர்வாதம் பண்ணுனாரு. இதனால அவரு மேல, கை கட்சிக்காரங்க செம கடுப்புல இருக்காங்க. எம்.எல்.ஏ.,வும் - எடியூரப்பாவும் ஒரே ஜாதிகாரங்க. கட்சி நலனை விட, ஜாதி தான் முக்கியமா போச்சுன்னு, எம்.எல்.ஏ.,வ வசைபாட ஆரம்பிச்சி இருக்காங்க. இதனால அமைச்சரா இருக்குற, அவரு மகனுக்கு நெருடல் ஏற்பட்டு இருக்காம்.
கட்சியுடன் தொடர்பு இல்லை!
புல்லுக்கட்டு கட்சிக்கு வட மாவட்டத்துல இருக்குறது, ஒரே ஒரு எம்.எல்.ஏ., தான். அவரும், தொட்டகவுடரும் குடும்பம் ரொம்ப குளோசா இருந்தாங்க. எப்போ தாமரை கட்சி கூட, புல்லுக்கட்டுக்காரங்க கூட்டணி வைச்சாங்களோ, அப்போ இருந்து அந்த எம்.எல்.ஏ., விலக ஆரம்பிச்சிட்டாரு.
அவர புல்லுக்கட்டோட இளைஞர் அணி தலைவரு, சமாதானப்படுத்த பார்த்தாரு. ஆனா ஒண்ணும் நடக்கல. இப்போ அந்த எம்.எல்.ஏ., கூட கட்சியும், கட்சி கூட எம்.எல்.ஏ.,வும் தொடர்புல இல்லையாம். அமைதியா இருக்குற எம்.எல்.ஏ., நடவடிக்கை மர்மமா இருக்கு.
நண்பனை அழைக்கும் தாடிக்காரர்!
கனிம மாவட்டத்துல செல்வாக்கோட இருந்தவரு ரெட்டி. தாமரை கட்சியில இருந்தாரு. இப்போ தனியா கட்சி ஆரம்பிச்சு, அனுமன் கோவில் இருக்குற தொகுதி எம்.எல்.ஏ., ஆயிட்டாரு. அவர மறுபடியும், தாமரை கூட்டிட்டு வர்ற வேலைகள் நடக்குது. இந்த பொறுப்ப, ரெட்டியோட நெருங்கிய நண்பரான தாடிகாரர்கிட்ட கொடுத்து இருக்காங்க. நண்பன் கிட்ட பேசுன தாடிகாரரு, என்ன நண்பா.... அரசியல்னா அப்படி இப்படி தான் இருக்கும்.
இதுக்கு போயி கோவப்பட்டு தனி கட்சி ஆரம்பிச்சா எப்படி? நம்ம கட்சிக்கு வந்துருன்னு அழைப்பு விடுத்து இருக்குறாராம். ரெட்டியும் யோசிக்க ஆரம்பிச்சி இருக்காரு.

