முதல்வர் மேல அதிருப்தி!
புல்லுக்கட்டு கட்சியில இருந்து விலகி, கை கட்சிக்கு வந்து தேர்தல்ல ஜெயிச்ச, இரண்டு பேருக்கு தலைவர் பதவி கிடைச்சி இருக்கு. இதுக்கு முதல்வர் தான் முக்கிய காரணமாம். முதல்வரு கை கட்சியில சேருதற்கு முன்னாடி, புல்லுக்கட்டு கட்சியில இருந்தவரு. இதனால அந்த கட்சியில இருந்து வந்த, தோஸ்துகளுக்கு பதவி வாங்கி கொடுத்து இருக்காரு. ஆனா இதுக்கு கை கட்சியில எதிர்ப்பு கிளம்பி இருக்காம். உங்க கூட்டாளிகளுக்கு பதவி வாங்கி கொடுத்தா, கட்சிக்காக உழைச்சவங்க எங்கே போறதுன்னு, முதல்வர் மேல மூத்த தலைவர்கள், அதிருப்தி வெளிப்படுத்தி இருக்காங்களாம்.
பிடி கொடுக்காத நடிகை!
சர்க்கரை மாவட்ட தலைநகரு தொகுதியில இருந்து, நடிகை ஒரு முறை, கை கட்சி எம்.பி.,யா ஜெயிச்சி இருந்தாங்க. வர்ற தேர்தல்ல அவங்க மறுபடியும் களம் இறக்கலாம்னு, கை கட்சி தலைவர்கள் பிளான் வைச்சி இருக்காங்க. ஆனா இதுக்கு நடிகை சரியா பிடி கொடுக்க மாட்டாங்குறாங்களாம். அவர தொடர்பு கொண்டு பேசுறதே கஷ்டமாக இருக்காம். ஆனாலும் அவர் தேர்தல்ல போட்டியிடுவார்னு, ஒரு டீம் நம்பிக்கையில இருக்கு. சமீபத்துல நடிகை உடற்பயிற்சி செஞ்ச வீடியோ சமூக வலைத்தளங்கள வைரலாச்சு. தேர்தல சந்திக்குறதுக்கு, உடலை தயார்படுத்திட்டு வர்றாங்கன்னு பேச்சு அடிபடுது.
பெண் எம்.பி.,யின் மர்மம்!
சர்க்கரை மாவட்ட தலைநகரு தொகுதி சுயேச்சை பெண் எம்.பி., வர்ற தேர்தல்ல, தாமரை கட்சி 'சீட்' எதிர்பார்க்குறாங்க. ஆனா தாமரை கூட கூட்டணியில இருக்குற, புல்லுக்கட்டு கட்சிக்கு, அந்த தொகுதி போகும்னு சொல்லப்படுது.
ஆனாலும் பெண் எம்.பி., நான் என்னோட தொகுதியில தான், போட்டியிடுவேன் உறுதியா சொல்லிட்டு வர்றாங்க. கை கட்சியிலயும் எனக்கு ஆதரவாளர்கள் இருக்காங்கன்னு, எம்.பி., சொல்லி இருக்காங்க. அவரோட பேச்சுல ஏதோ பொடி வைச்சு மர்மமா பேசிட்டு வர்றாங்க. அந்த மர்மம் என்னன்னு தான் தெரியல.
மகளுக்காக தந்தை சர்க்கஸ்!
பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதி, தாமரை கட்சியோட கோட்டையா இருக்கு. இதனால அந்த தொகுதியில போட்டியிடுதற்கு, கை கட்சியில யாரும் ஆர்வம் காட்டல. ஆனாலும் ஒன்னு, இரண்டு தலைகட்டுகள் சீட் க்கு ஆசைப்படுறாங்க. ஆனா அறநிலையத்துறை அமைச்சரு, தன்னோட மகளை அந்த தொகுதியில, களம் இறக்க, சர்க்கஸ் நடத்திட்டு வர்றாரு. கடந்த சட்டசபை தேர்தல்ல, அமைச்சரோட மகள், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்துல தோத்து போனாங்க. இதனால தாமரைகாரங்களுக்கு பதிலடி கொடுக்க, மகள அந்த தொகுதியில நிறுத்தி, வெற்றி பெற வைக்க மும்முரமாக இருக்காராம்.