ADDED : பிப் 01, 2024 07:07 AM
எம்.எல்.ஏ., மேல கடுப்பு!
சர்க்கரை மாவட்ட கிராமத்துல, ஹனுமன் கொடிய இறக்குனதுனால பெரிய பிரச்னை ஏற்பட்டு இருக்கு. இந்த பிரச்னைக்கு தொகுதி கை கட்சி எம்.எல்.ஏ., அலட்சியம் தான் காரணம்னு சொல்லுறாங்க. பிரச்னை ஏற்பட்டதும் முதல்வரு, துணை முதல்வரு கிட்ட எதுவும் பேசாம, இஷ்டத்துக்கு செயல்பட்டு இருக்காரு.
அவரு முதல்முறை எம்.எல்.ஏ., ஆனவரு. இதனால தலை, காலு புரியாம சுத்திட்டு இருக்காரு, அவரோட அலட்சியத்தால, ஆட்சிக்கு தான் கெட்ட பேர்னு, கை கட்சிக்காரங்க, எம்.எல்.ஏ., மேல கடுப்புல இருக்காங்களாம்.
வாய் திறக்காத தொட்டகவுடர்!
தாமரை கட்சி கூட கூட்டணி வைச்சதுக்கு அப்புறம், தத்தா கோவிலுக்கு மாலை போடுவேன்னு, குமரண்ணரு சொன்னார். சர்க்கரை மாவட்டத்துல நடந்த பிரச்னை தொடர்பான, போராட்டத்துல காவி துண்டு அணிச்சு கலந்துகிட்டாரு. இத வைச்சு அவர கை கட்சிக்காரங்க, கிண்டல் அடிச்சிட்டு வர்றாங்க.
அதுக்கு குமரண்ணரும் பதிலடி கொடுத்தாரு. ஆனா தொட்டகவுடர் வாய திறக்காம இருக்காரு. குமரண்ணர் காவி துண்டு போட்டது, தொட்டகவுடருக்கே பிடிக்கல. அதான் எதுவும் பேசாம அமைதியா இருக்கார்னு, கை கட்சிக்காரங்க சொல்லிட்டு வர்றாங்க.
அடித்து சொல்லும் ஆதரவாளர்கள்!
மத்திய உரத்துறை அமைச்சருக்கு 'சீட்' தராதீங்கன்னு, தாமரை கட்சி மாநில தலைவரு காலுல விழுந்தாரு, அந்த கட்சியோட எம்.எல்.ஏ., ஒருத்தரு. ஆனா அந்த எம்.எல்.ஏ., சொல்லுறத கேட்குற மனநிலையில தலைவரு இல்லையாம். இதுக்கு காரணம் மத்திய அமைச்சரும், தலைவரும் ஒரே ஜாதிக்காரங்க. அந்த எம்.எல்.ஏ., வேற ஜாதிக்காரரு. இதனால அவரு பேச்சு எடுபடாதுன்னு, கட்சிக்குள்ளேயே பேசுறாங்க. என்ன எதிர்ப்பு இருந்தாலும் மத்திய அமைச்சர் 'சீட்' வாங்கிடுவார்னு, அவரோட ஆதரவாளர்கள் அடிச்சு சொல்லுறாங்க.