கட்சியில நோ சப்போர்ட்!
'இந்தியாவ இரண்டா பிரிச்சி, தென் மாநிலங்கள் தனி நாடாக அறிவிக்கணும்னு கேட்குற, சூழ்நிலை வரும்'னு, கை கட்சி எம்.பி., சொல்லி இருக்காரு. தன்னோட கருத்துக்கு கட்சியில இருந்து ஆதரவு கிடைக்கும்னு எதிர்பார்த்தாரு. ஆனா யாரும் சப்போர்ட் பண்ணல.
எம்.பி.,யோட அண்ணன் தான் கர்நாடகா துணை முதல்வரு. அவரே தம்பிக்கு ஆதரவா ஜிங் ஜாங் போடல. எம்.பி.,க்கு எதிராக, தாமரை கட்சிக்காரங்க ரவுண்டு கட்டி இருக்காங்க. இதனால எம்.பி.,ய காப்பாத்த அவரு கட்சிக்காரங்க, மக்களோட மனசுல இருக்குறத தான், எம்.பி., சொன்னார்னு, சப்ப கட்டு கட்டுறாங்க.
அதிர்ச்சியில் பெண் எம்.பி.,
சர்க்கரை மாவட்ட தலைநகரு எம்.பி.,யான நடிகைக்கு, லோக்சபா தேர்தல்ல, தாமரை கட்சி 'சீட்' மேல ஆசை இருக்கு. எம்.பி.,யோட வலது, இடது கையா இருந்த ஒருத்தரு, எங்க தலைவிக்கு தான் 'சீட்' கொடுக்கணும்னு, இவ்வளவு நாளாக சொல்லிட்டு வந்தாரு. திடீர்னு என்ன நினைச்சாரோ தெரியல. தாமரை கட்சியில 'சீட்' எதிர்பார்க்குற இன்னொரு தலைவருக்கு ஆதரவா பேசிட்டு வர்றாரு. இதனால எம்.பி., அதிர்ச்சி ஆகி இருக்காங்க. நமக்கு எதிரா ஏதோ சதி நடக்குது. உஷாரா இருக்கணும்னு முடிவு பண்ணி இருக்காங்களாம்.
முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்குமா?
தாமரை கட்சி கூட புல்லுக்கட்டுகாரங்க கூட்டணி வைச்சதுனால, அந்த கட்சியில இருந்து முஸ்லிம் பிரமுகர்கள் விலகுனாங்க. ஆனாலும் தொட்டகவுடருக்காக கட்சியில இன்னும் சிலர் இருக்காங்க. இந்நிலையில குமரண்ணர், காவி துண்ட கழுத்துல போட்டத, கட்சியில இருக்குற சிலரால ஏற்றுக்கொள்ள முடியலியாம். தொண்டர்களே, குமரண்ணர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிச்சு இருக்காங்க. இருக்குற கொஞ்ச, நெஞ்ச முஸ்லிம் ஓட்டுகளயும் கட்சிக்கு கிடைக்க விடாம பண்ணிடுவார்னு போலயே, புலம்பிட்டு வர்றாங்க.

