தாக்கு பிடிக்குமா கூட்டணி?
தாமரை கூட கூட்டணி வச்சதுனால, தொட்டகவுடர், குமரண்ணர் மேல, புல்லுக்கட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்களே அதிருப்தியில இருந்தாங்க. ஒரு வழியா பேசி எல்லாரையும் சமாதானப்படுத்துனாரு குமரண்ணரு. ஆனா இப்போ புல்லுக்கட்ட, கூட்டணியில சேர்த்ததுனால, தாமரை கட்சி தலைவர்கள் அதிருப்தியில இருக்காங்க. பிரதமர் மோடிக்காக, புல்லுக்கட்டு கூட கூட்டணி வைச்சத, சகிச்சிகிட்டு இருக்கோம்னு, தாமரை முன்னாள் அமைச்சரு சொல்லி இருக்காரு. போற போக்க பாத்தா, இந்த கூட்டணி கடைசி வர தாக்குபிடிக்குமா என தொண்டர்களே கேட்குறாங்க.
மக்கள் ஆசைப்படுறாங்களாம்!
லோக்சபா தேர்தல்ல மகனுக்கு 'சீட்' வாங்கி கொடுக்க, கர்நாடகா பெண்கள் நல அமைச்சரு, தீவிரமாக வேலை பார்த்துட்டு வர்றாரு. மகன் தேர்தல்ல நிக்கணும்னு நான் ஆசைப்படல. தொகுதி மக்கள் ஆசைப்படுறாங்க'ன்னு சொல்லி இருக்காங்க. மகனுக்கு 'சீட்' கொடுக்கலன்னா கூட வருத்தப்பட மாட்டேன். கட்சி சொல்ற வேட்பாளர ஆதரிச்சு, பிரசாரம் செய்வேன்னும் சொல்லி இருக்காங்க. ஆனா, இதை நம்ப தொண்டர்கள் தயாரா இல்லையாம்.
தாமரை தலைவர்களுக்கு உத்தரவு!
லோக்சபா தேர்தல்ல கர்நாடகாவுல 28 தொகுதியிலயும், வெற்றி பெற தாமரைகாரங்க 'பிளான்' வச்சி இருக்காங்க. மக்கள் கிட்ட போய், அரசு செய்யுற தப்ப சொல்லிட்டே இருங்க. கை கட்சிக்காரங்க வாய் தவறி என்ன சொன்னாலும், அத கெட்டியா பிடிச்சிக்கோங்கன்னு, கர்நாடகா தாமரை தலைவர்களுக்கு, மேலிடம் உத்தரவு போட்டு இருக்காம். இத பத்தி தெரிஞ்சிகிட்ட முதல்வரு, லோக்சபா தேர்தல்ல முடியுற வரை, எதுவா இருந்தாலும் பார்த்து பேசுங்கன்னு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டு இருக்காராம்.

