குட்டிக்கரணம்!
பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதி, தாமரை கட்சியோட கோட்டையா இருக்கு. வர்ற தேர்தல்ல இந்த தொகுதியில ஜெயிச்சே ஆகணும்னு, கை கட்சியோட மாநில தலைவரு சிவா, அடிச்சிட்டு வர்றாரு. ஆனா அந்த தொகுதியில போட்டியிட, கை கட்சியில யாருக்கும் ஆர்வம் இல்ல. போக்குவரத்து அமைச்சரு மகளோட பெயரு அடிபடுது. ஆனாலும் தகுதியான வேட்பாளர, மாநில தலைவரு தேடிட்டே வர்றாராம். இன்னும் ஒருத்தர் கூட அவரு கண்ணுல சிக்கலயாம். தேர்தல் வேற நெருங்கிட்டு வருது. என்ன பண்ணுறதுன்னு தலைய பிய்க்க ஆரம்பிச்சி இருக்காரு.
சினிமாக்காரரின் சுறுசுறுப்பு!
புல்லுக்கட்டு கட்சியோட தலைவர் குமரண்ணரோட, தவப்புதல்வரு சினிமாக்காரராக இருக்காரு. இரண்டு தேர்தல்ல போட்டியிட்டு, தோல்வி அடைஞ்சாரு. இதனால வெக்ஸ் ஆன குமரண்ணரு, மகன் இனி சினிமாவுல கவனம் செலுத்துவாரு, அரசியலுக்கு வர மாட்டார்னு சொன்னாரு. ஆனா இப்போ அப்படியே நேருக்கு மாறாக நடந்துட்டு வருது. சினிமா பக்கம் போகாம, அரசியல்ல கவனம் செலுத்திட்டு வர்றாரு, குமரண்ணரு புள்ள. சர்க்கரை மாவட்ட தலைநகர் தொகுதியில போட்டியிடுவார்னு சொல்றாங்க. இதனால அந்த மாவட்டத்துல சுறுசுறுப்பாக வலம் வந்துட்டு இருக்காரு.
தலைவரை சுற்றும் கூட்டம்!
கர்நாடகா தாமரை கட்சி தலைவராக விஜயேந்திரரு, பொறுப்பு ஏற்றதுல இருந்து, கட்சிக்கு புத்துணர்வு கிடைச்சி இருக்கு. மாவட்ட வாரியா தலைவர்கள், நிர்வாகிகள நியமிச்சாங்க. இப்போ தொகுதி வாரியா தலைவர்கள நியமிக்க போறாங்க. கட்சிக்காக உழைக்குறவங்க, பட்டியல எடுத்துட்டு வர்றாங்க. லோக்சபா தேர்தலுக்குள்ள தொகுதிக்கு தலைவர்களே நியமிச்சி, கட்சிய வலுவடைய வைக்க, தலைவரும் ரெடியாக இருக்காரு. இதனால பதவி கேட்டு, அவரு பின்னாடி ஈ மொய்க்குற மாதிரி, அலைஞ்சிட்டு வர்றாங்க ஒரு கூட்டம். யாருக்கு பதவின்னு கூடிய சீக்கிரத்துல தெரிஞ்சிரும்.

