உடைந்த சிலையால் உருவானது போராட்டம்; ஆளும் கூட்டணிக்கு நீளும் நெருக்கடி!
உடைந்த சிலையால் உருவானது போராட்டம்; ஆளும் கூட்டணிக்கு நீளும் நெருக்கடி!
UPDATED : செப் 01, 2024 11:38 AM
ADDED : செப் 01, 2024 11:37 AM

மும்பை: மஹாராஷ்டிரா, சிந்துதுர்க் மாவட்டத்தில் சிவாஜி சிலை உடைந்து நொறுங்கிய சம்பவத்தில் மாநில அரசை கண்டித்து கண்டித்து மும்பையில் மஹா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் நடத்தும் போராட்டத்தால் ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் ராஜ்கோட் கோட்டையில் கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த, 35 அடி உயர மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை, சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்தது. மாநில அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிலையை வடிவமைத்த கட்டட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மன்னிப்பு
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சத்ரபதி சிவாஜி பாதம் பணிந்து 100 முறை மன்னிப்பு கேட்க தயார் என்று அறிவித்து இருந்தார். சத்ரபதி சிவாஜியின் 32 அடி உயர சிலை இடிந்து விழுந்ததற்கு, பிரதமர் மோடியும் மன்னிப்பு கோரினார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் முன் வைத்தன.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், இன்று(செப்.,01) சிவாஜி சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து மும்பையில் மஹா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்கள் போராட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் செருப்பால் அடிக்கும் போராட்டம் என்று பெயர் சூட்டியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை எடுத்து மும்பையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை எதிர்க்கட்சி கூட்டணியினர் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் ஆளும்கட்சி கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.