தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'சீ...சீ... இந்த பழம் புளிக்கும்' முனியப்பா ஞானோதயம்

'சீ...சீ... இந்த பழம் புளிக்கும்' முனியப்பா ஞானோதயம்

'சீ...சீ... இந்த பழம் புளிக்கும்' முனியப்பா ஞானோதயம்


ADDED : மார் 12, 2024 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 03:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலார் லோக்சபா தொகுதியில் 28 ஆண்டுகள் எம்.பி.,யாக முடிசூடா மன்னராக இருந்தவர், கே.ஹெச்.முனியப்பா. இவர் 2019ல் முதல் முறையாக தோற்கடிக்கப்பட்டார். ஆனாலும் அரசியலில் ஓய்வெடுக்கவில்லை. மாறாக தேவனஹள்ளி சட்டசபை தொகுதியில் 2023ல் முதன் முறையாக போட்டியிட்டார்; வென்றார். அவரின் அரசியல் அனுபவம் அறிந்த மேலிடம், அவரை மாநில உணவுத் துறை அமைச்சர் ஆக்கியது.

லோக்சபா தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் 'தட்டுப்பாடு' ஏற்பட்டதால், காங்கிரசின் மேலிடம் 12 தொகுதிகளில், அமைச்சர்களை களத்தில் இறக்க, டில்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவு, கர்நாடக அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைத்தது. சில அமைச்சர்கள் வெளிப்படையாகவே, தங்களுக்கு மாநில அரசியலே போதுமென தெரிவித்து விட்டனர்.

மேலிடம் முடிவு


இந்நிலையில் கோலார் லோக்சபா தொகுதியில் மீண்டும் முனியப்பாவை போட்டியிட வைக்க வேண்டும் என மேலிடத் தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். இதையறிந்த, 'உஷார் பார்ட்டி'யான முனியப்பா, 2019 தேர்தலில், தோல்வி அடைய வைத்தவர்கள், இப்போதும் எதிர்ப்பாளர்களாகவே இருந்து வருகின்றனர். ஒரு வேளை, லோக்சபா தேர்தலில் தோற்றால், மாநில அமைச்சர் பதவிக்கு ஆபத்து வரும் என கருதினார்.

எனவே, தன் இளைய மருமகன் சிக்க பெத்தண்ணா போட்டியிட அனுமதி தாருங்கள் என்று பெங்களூரு வந்திருந்த கட்சி மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவிடம் தெரிவித்தார்.

அவரோ, 'கோலார் லோக்சபா தொகுதியில், நீங்கள் போட்டியிடுவதாக இருந்தால், உங்களுக்கு சீட் உறுதி. நீங்கள் அடையாளம் காட்டும் நபருக்கு சீட் வேண்டும் என்றால், கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று தெரிவித்து விட்டார் .

எதிர் கோஷ்டி


'கோலார் லோக்சபா தொகுதியில், எக்காரணம் கொண்டும் முனியப்பாவுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ சீட் கொடுக்க கூடாது; ஒருவேளை கொடுத்தால், அவர் தோல்விக்கு நாங்கள் பொறுப்பல்ல' என, அவரது எதிர் கோஷ்டியினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

இதை எதிர்பார்த்த முனியப்பா, தன் இளைய மருமகன் சிக்க பெத்தண்ணாவை ரமேஷ் குமார் வீட்டிற்கே அனுப்பி, 'சீட் கிடைக்க உதவி செய்யுங்கள்' என கேட்க வைத்துள்ளார். ஆகட்டும் பார்க்கலாம்; கட்சி மேலிடம் யாருக்கு சீட் தருகிறதோ அவரை வெற்றி பெற செய்யலாம் என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.

இவர் சென்ற வேளையில், இத்தொகுதியில் போட்டியிட ஆசைப்படும் ரமேஷ் குமார் ஆதரவாளர் சி.எம்.முனியப்பாவும் அங்கிருந்து உள்ளார். நடந்த இக்கதையை, தன் மாமனாரிடம் மருமகன் கூறியுள்ளார்.

ஒரே போடு


ஏற்கனவே, 1952ல் இருந்து காங்கிரஸ் எஸ்.சி., பிரிவில் இடது பிரிவினருக்கு தான் சீட் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை வலது பிரிவினருக்கு தான் சீட் வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் மேலிடம் வரை வலியுறுத்தி வருகின்றனர். இதில், கே.ஹெச். முனியப்பா குடும்பத்தினர், இடது பிரிவை சேர்ந்தவர்.

எவ்வளவோ தடவை முட்டி மோதியாச்சு. தனக்கு சரிப்பட்டு வராது என்ற நிலையில் தான், கோலார் தொகுதியில் தனக்கோ, தனது குடும்பத்துக்கோ சீட் கேட்கவில்லை. யாருக்கு சீட் கொடுத்தாலும் அவரை வெற்றி பெற செய்வோம் என்று முனியப்பா 'ஒரே போடு' போட்டுள்ளார்.

முனியப்பா அமைச்சராகவும், அவரின் மகள் ரூபகலா, தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளனர். இவரை தொடர்ந்து, முனியப்பாவின் இளைய மருமகனுக்கு எம்.பி., சீட் தரவேண்டுமா. இவர் குடும்பத்தை விட்டால், கோலார் மாவட்ட காங்கிரசில் வேறு யாரும் தகுதியானவர் இல்லையா என பல கேள்விகளும் எழுந்துஉள்ளது.

இதை எல்லாம் கூட்டி கழித்து பார்த்து தான் சீ...சீ.., இந்த பழம் புளிக்கிறது என்ற படி முனியப்பாவின் செயல்பாடுகள் உள்ளதாக தெரிகிறது.

கோலார் லோக்சபா தொகுதியில் சீட் கேட்பவர்களில் எல்.ஹனுமந்தப்பா உட்பட பத்து பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். விரைவில் வேட்பாளர் பட்டியல் வரும் போது, இதற்கு விடை கிடைத்து விடும்

- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us