ADDED : ஜன 03, 2024 11:22 PM
இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட, 'செல்பி' எடுப்பது என்றால் மிகவும் விருப்பம். புதிய உடைகள் அணிந்தால், எங்காவது சுற்றுலா சென்றால், பார்ட்டி, திருமணம், பிறந்த நாள் கொண்டாட்டம் என, எங்கு சென்றாலும் செல்பி எடுக்க மறப்பதில்லை.
'ஸ்மார்ட்' மொபைல் போன் வந்த பின், செல்பி மோகம் அதிகரித்துள்ளது. இத்தகைய செல்பி பிரியர்களுக்காகவே, ஹாசனில் ஒரு அருமையான இடம் உள்ளது.
ஹாசனில் இருந்து, வெறும் 8 கி.மீ., தொலைவில் ஹாலுவாகிலுவில் ஏரி நீர் வீழ்ச்சி உள்ளது. பால் நுரையை போன்று தண்ணீர் பாய்வதை பார்ப்பதே அற்புதமான அனுபவம். வார இறுதியில் இங்கு இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம், கூட்டமாக வருகை தருகின்றனர். காலை முதல் மாலை வரை, நீரில் விளையாடிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
குழந்தைகள் விளையாட ஏற்ற இடம். பணிச்சுமையால் மனம் வெறுப்பில் உள்ளவர்கள், அமைதியை தேடி இந்த ஹாலவாகிலுவுக்கு வந்து பொழுது போக்குகின்றனர். மனம் அமைதியடைந்து புத்துணர்ச்சியுடன் திரும்புகின்றனர்.
இங்கு, 'ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்'டும் நடப்பதுண்டு. கல்லுாரி மாணவ - மாணவியர் இங்கு அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இந்த இடம் செல்பி ஸ்பாட் என, அழைக்கப்படுகிறது.
ஏரியின் தண்ணீர் அழுக்கு, அசுத்தம் இல்லாமல் மிகவும் துாய்மையாக தென்படுகிறது. இதனால் அதில் இறங்கி விளையாடுகின்றனர். ஹாலுவாகிலுவுக்கு ஒரு முறை செல்லுங்கள். மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
- நமது நிருபர் -