ADDED : நவ 14, 2024 09:33 PM

ஜிகனி; உத்தர பிரதேசத்தில் இருந்து ரயிலில் கடத்தி வந்து, பெங்களூரில் கஞ்சா சாக்லேட் விற்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு ரூரல் ஜிகனி போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கு இடமாக இருந்த மூன்று பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது.
டிரைவர் இருக்கையின் கீழ், ஒரு கவரில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா சாக்லேட்டுகள், அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், உத்தரபிரதேச மாநிலத்தின் ஜிது சிங், 34, ஆனந்த் குமார் சிங், 32, அபய் கோஸ்வாமி, 34 என்பது தெரிந்தது.
இவர்கள், தங்களது கூட்டாளிகளான சோமு சிங், 30, சூரஜ் சிங், 28, அங்கூர் சிங், 34 ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இவர்களும் கைது செய்யப்பட்டனர். கைதான ஆறு பேரும் ராஜாஜி நகரில் வசித்தனர். இவர்கள் வீட்டில் இருந்து 12,000 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள், உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்த மோனு என்பவரிடம் இருந்து, கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி, ரயிலில் கடத்தி வந்து, பெங்களூரில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு விற்பனை செய்தது தெரிந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சாவின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் ஆகும்.