கேரளாவில் மூத்த குடிமக்கள் கமிஷன் நாட்டிலேயே முதல்முறையாக அமைப்பு
கேரளாவில் மூத்த குடிமக்கள் கமிஷன் நாட்டிலேயே முதல்முறையாக அமைப்பு
UPDATED : செப் 04, 2025 12:39 AM
ADDED : செப் 04, 2025 12:38 AM

திருவனந்தபுரம், நாட்டிலேயே முதல் முறையாக மூத்த குடிமக்களுக்கான கமிஷனை கேரள அரசு அமைத்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கவும், அவர்களின் உரிமைகளை காக்கவும் இந்த கமிஷன் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வசிக்கும் மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் அம்மாநில சட்டசபையில் கேரள மூத்த குடிமக்கள் கமிஷன் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் நாட்டிலேயே முதல் முறையாக மூத்த குடிமக்களுக்கான கமிஷனை அமைத்து, அதன் தலைவராக சோம பிரசாத் என்பவரை கேரள அரசு நேற்று நியமித்தது. இந்த தகவலை அம்மாநில உயர்கல்வி மற்றும் சமூக நீதித் துறை அமைச்சர் பிந்து உறுதி செய்துள்ளார்.
கமிஷனின் உறுப்பினர்களாக அமரவில்லா ராமகிருஷ்ணன், ஈ.எம்.ராதா, கே.என்.கே.நம்பூதிரி மற்றும் லோபஸ் மேத்யூ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
''குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிப்பு, சொத்துகளை ஏமாற்றி சுரண்டுவது, ஆதரவற்ற நிலையில் கைவிடுவது உள்பட முதியோருக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க இந்த கமிஷன் உதவும். முதியோர் நலனுக்காக பாடுபடுவதுடன் அவர்களின் மறுவாழ்வுக்கும் இந்த கமிஷன் வழிகாட்டும்'' என அமைச்சர் பிந்து தெரிவித்தார்.