ADDED : பிப் 22, 2026 01:41 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ரேஷ்மி, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார். இவர், வரும் தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ளார் என, அக்கட்சியின் மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தமிழகத்தைப் போல் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்., மாநில மகளிரணி பொதுச்செயலராக இருந்த ரேஷ்மி, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக காங்.,கின் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றி வந்தேன். எனினும், 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின், கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டதால், அக்கட்சியில் இருந்து வெளியேறினேன்,” என்றார்.
இதைத்தொடர்ந்து ரேஷ்மியை, பா.ஜ.,விற்கு வரவேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர், வரும் தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் ரேஷ்மி போட்டியிடுவார் எனவும் அறிவித்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில், கொட்டாரக்கரா தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர்களில் ஒருவரும், தற்போதைய நிதியமைச்சருமான பாலகோபாலுக்கு எதிராக, கடும் போட்டியை ரேஷ்மி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

