இரட்டை தற்கொலை வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
இரட்டை தற்கொலை வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
ADDED : அக் 28, 2025 06:59 AM

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில், அரசு ஊழியர்கள் இருவர் தற்கொலை செய்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தலோ போடோம், 53. இவர், தற்போது டில்லி அரசின் பொதுப் பணித் துறையில் சிறப்பு அதிகாரியாக உள்ளார்.
இவர், அருணாச்சலின் இடாநகரில் துணை ஆணையராக இருந்த போது, பொதுப் பணித் துறை ஊழியராக கோம்சு யேகர், 19, என்ற வாலிபரை நியமித்தார்.
இந்நிலையில், இடா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த கோம்சு யேகர், கடந்த 23ல் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்த கடிதத்தில், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலோ போடோம், பொறியாளரான லிக்வாங் லோவாங் ஆகியோர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். இதனால், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டேன்.
'எனக்கு 1 கோடி ரூபாய் தருவதாக இருவரும் உறுதியளித்தனர். ஆனால் தரவில்லை. மாறாக என்னை கொன்று விடுவதாக மிரட்டினர். கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
'தலோ போடோம் மற்றும் லிக்வாங் இருவரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டை தலோ போடோம் மறுத்த நிலையில், மற்றொருவரான லிக்வாங் தன் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கோம்சு யேகர் மற்றும் லிக்வாங்கின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த சூழலில், தலோ போடோம், இடாநகர் போலீசாரிடம் நேற்று சரணடைந்தார். அவரை போலீ சார், முறைப்படி கைது செய்தனர். தற்கொலை செய்த இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, கோம்சு யேகருக்கு நீதி வழங்க வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் நேற்று பொதுப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதனால், மாநிலம் முழுதும் பதற்றம் நிலவுகிறது.

