'கொலீஜியம்' பரிந்துரைக்கு மூத்த நீதிபதி எதிர்ப்பு
'கொலீஜியம்' பரிந்துரைக்கு மூத்த நீதிபதி எதிர்ப்பு
ADDED : ஆக 27, 2025 01:34 AM

புதுடில்லி, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலியை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, 'கொலீஜியம்' பரிந்துரை செய்ததற்கு, அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள மூத்த நீதிபதி பி.வி.நாகரத்னா அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது, பணியிட மாற்றம் செய்வது போன்ற முடிவுகளை, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு எடுக்கிறது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜீயம் அமைப்பில், மூத்த நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோர் உள்ளனர்.
இந்த கொலீஜியம் அமைப்பின் கூட்டம், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலி ஆகியோரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட அளவான 34 ஆக அதிகரிக்கும்.
இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலியை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்ததற்கு, அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள மூத்த நீதிபதி பி.வி.நாகரத்னா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி பி.வி.நாகரத்னா எழுதிய கடிதம்:
குஜராத் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஏற்கனவே பதவி வகிக்கின்றனர்.
இந்த சூழலில், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது, பிராந்திய பிரதிநிதித்துவத்தின் சமநிலையை சீர்குலைக்கும்.
குஜராத்தில் இருந்து பாட்னாவுக்கு நீதிபதி விபுல் எம்.பஞ்சோலி பணியிட மாற்றம் செய்யப்பட்டதும், குறுகிய காலத்திலேயே தற்போது பதவி உயர்வு அளிப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு, கொலீஜியத்தின் நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகங்களை எழுப்பக்கூடும்.
பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை கவனிக்காவிட்டால், நீதி நிர்வாகத்தில் பாதகமான விளைவு ஏற்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.