ADDED : நவ 19, 2024 02:22 AM

பதான்,குஜராத்தில், ராகிங் கொடுமைக்கு ஆளாகி மயங்கி விழுந்து உயிரிழந்த, 18 வயது மருத்துவ மாணவரின் மரணம் தொடர்பாக சீனியர் மாணவர்கள் 15 பேர் மீது, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குஜராத்தின் பதான் மாவட்டம், தார்புர் என்ற இடத்தில், ஜி.எம்.இ.ஆர்.எஸ்., மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை உள்ளது.
இங்கு, விடுதியில் தங்கி முதலாமாண்டு படிக்கும் எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 11 பேரை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கடந்த 16ம் தேதி இரவு, தங்கள் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கமான அறிமுகங்கள் முடிந்தவுடன், 11 மாணவர்களையும் பாட்டுப்பாடி நடனம் ஆட சீனியர் மாணவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
தயங்கிய மாணவர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் உள்ளனர். முதலாமாண்டு மாணவர்களை இரவு மூன்று மணி நேரம் நின்றபடி இருக்க செய்து, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். அப்போது அனில் மேதானியா, 18, என்ற முதலாமாண்டு மாணவர் திடீரென மயங்கி சரிந்துள்ளார்.
அவரை மருத்துவமனைக்கு துாக்கி சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, கல்லுாரியின் கூடுதல் டீன் டாக்டர் அனில் பதிஜா அளித்த புகாரின்படி, இரண்டாம் ஆண்டு படிக்கும் 15 மாணவர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கில் சிக்கியுள்ள 15 மாணவர்கள் கல்லுாரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.