ADDED : செப் 21, 2024 11:12 PM

சேவை செய்யும் மனம் இருந்தால், எப்படிப்பட்ட சேவையும் செய்யலாம் என்பதற்கு, தஸ்தகீர் சாப் கட்டிமனி உதாரணமாக வாழ்கிறார். 71 வயதிலும் சுற்றுலா பயணியருக்கு, புராதன இடங்கள், கோவில்களை பற்றி தகவல் கூறுகிறார்.
கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வரலாற்று பின்னணி உள்ளது. அதேபோன்று கதக் மாவட்டமும், வரலாற்று பின்னணி கொண்டது தான். தன்னுடையதேயான பாரம்பரியத்தை கொண்டுள்ளது.
ஹிந்து, ஜெயின் கோவில்கள், சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். கதக்கில் அச்சகங்கள், கைத்தறிகள் மிகவும் அதிகம்.
கதக் பெருமை
'பாரத ரத்னா' விருது பெற்ற ஹிந்துஸ்தானி பாடகர் பஞ்சித் பீமசேனா ஜோஷி, சுதந்திர போராட்ட தியாகி ஹுயிலேகோளா நாராயண ராவ், பிரபலமான கிரிக்கெட் வீரர் சுனில் ஜோஷி உட்பட, பலர் கதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட கதக் குறித்து, அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வது அவசியம். இதுபோன்ற மகத்துவமான சேவையை, 50 ஆண்டுகளாக அப்துல் ரசாக் தஸ்தகீர் சாப் கட்டிமனி, 71, செய்து வருகிறார்.
இவர் அரசால் நியமிக்கப்படவில்லை என்றாலும், கதக் மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை புராதன காலத்து கோவில்களுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த கோவில்களின் வரலாறு, சிறப்பம்சங்கள் குறித்து தகவல் தெரிவிக்கிறார்.
அப்துல் ரசாக் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டில், தன் சகோதரருடன் வசிக்கிறார். 10ம் வகுப்பு படிக்கும் போதே, வரலாற்றில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
தன் வீட்டு அருகில் உள்ள வீர நாராயணர், திரிகோடேஸ்வரா, லக்ஹுன்டி கோவில்களுக்கு அவ்வப்போது செல்லத் துவங்கினார். அங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுகளை பார்த்தார். இது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடத் துவங்கினார்.
அருங்காட்சியகங்கள்
வித்வான்களை சந்தித்தார்; புத்தகங்களை படித்தார். பன்டகெரே, கல்டுகு பெடகேரி, கதக்கின் பழைய பெயர்கள் என்பதையும் தெரிந்து கொண்டார். அருங்காட்சியகங்களுக்கு சென்று, கல்வெட்டுகள், பழைய நாணயங்களை பார்வையிட்டார்.
ஓய்வு நேரத்தில் கோவில்களின் ஒவ்வொரு சுவர்கள், கம்பங்கள் மீது செதுக்கப்பட்ட சிற்பங்களை ஆய்வு செய்தார். புராதன கோவில்கள், சிற்பங்களின் வரலாறு குறித்து தனக்கு தெரிந்த தகவல்களை, சுற்றுலா பயணியர், வெளிநாட்டவருக்கு விவரித்தார்.
பத்தாம் வகுப்பை முடித்தபின், தினமும் சைக்கிளில் லக்ஹுன்டிக்கு வருவார். மாலையில் தான் வீடு திரும்புவார். அதுவரை கோவில்களுக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, இலவச வழிகாட்டியாக மாறினார்.
இதற்கிடையே வரலாற்றில் எம்.ஏ., பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் லக்ஹுன்டியில் முகாமிட்டார். இங்கு வரும் சுற்றுலா பயணியருடன் சென்று, வழி காட்டினார். இதற்காக அவர் பணம் எதுவும் பெற்றது இல்லை. இன்றும் அவரது சேவை தொடர்கிறது. இவருக்கு குடும்பத்தினரும் ஆதரவாக உள்ளனர். உண்மையில் இவரது சேவை மகத்தானது.
உற்சாகம்
வரலாற்று வல்லுனர் தத்த பிரசன்னா பாட்டீல் கூறியதாவது:
அப்துல் ரசாக் கட்டிமனி, நன்கு படித்தவர். லக்ஹுன்டியின் ஒவ்வொரு கற்களை பற்றியும் அறிந்தவர். பல ஆண்டுகளாக சுற்றுலா பயணியருக்கு வழிகாட்டியாக பணியாற்றுகிறார். கோவில்கள் குறித்து, தகவல் வேண்டுவோருக்கு தேவையான தகவல் தெரிவிக்கிறார். 71 வயதாகியும் அவரது உற்சாகம் குறையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அப்துல் ரசாக், வழிகாட்டி
- நமது நிருபர் -