ADDED : ஜன 01, 2025 12:43 AM

ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 34. இவர் பல பெண்களை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வீட்டு வேலைக்கார பெண்கள் இருவர், ம.ஜ.த., பெண் தொண்டர் அளித்த புகாரில், பிரஜ்வல் மீது பலாத்கார வழக்கு பதிவானது.
வெளிநாடுகளில் இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தவர், ஜெர்மனியில் இருந்து திரும்பிய போது, ஆகஸ்ட் 1 ம் தேதி அதிகாலை, பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
பெங்களூரு செஷன்ஸ், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பிரஜ்வல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இன்றும் சிறைவாசம் அனுபவிக்கிறார்.
பிரஜ்வலின் அண்ணன் சூரஜ், 36. ம.ஜ.த., - எம்.எல்.சி., தன்னிடம் இயற்கைக்கு மாறான உறவு கொண்டதாக, ம.ஜ.த., தொண்டர் அளித்த புகாரில், ஜூன் 23 ம் தேதி சூரஜ் கைது செய்யப்பட்டார். ஒரு மாத சிறைவாசத்திற்கு பின், ஜாமினில் வந்தார்.
வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பிரஜ்வல், சூரஜ் தந்தை ரேவண்ணா மே மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டார். அதுவும் அவரது தந்தையான, முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் வைத்து. பத்து நாட்கள் சிறைவாசத்திற்கு பின், ஜாமினில் வெளியே வந்தார்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 60. ககலிபுராவை சேர்ந்த 40 வயது பெண்ணை, பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஹனிடிராப், எய்ட்ஸ் பாதித்தவர்கள் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, அரசியல் எதிரிகளுக்கு பாய்ச்ச முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிந்தது. அவர் மீது 2,481 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடக பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 82. இவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரில், எனது 15 மகளுக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறி இருந்தார். எடியூரப்பா மீது பாலியல் வழக்கு பதிவானது. அவரிடம் விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.