அடையாள அணிவகுப்பில் குற்றவாளியை கண்டுபிடிக்காததால் தண்டனை நிறுத்திவைப்பு
அடையாள அணிவகுப்பில் குற்றவாளியை கண்டுபிடிக்காததால் தண்டனை நிறுத்திவைப்பு
ADDED : பிப் 27, 2026 02:25 AM
புதுடில்லி:கடந்த, 2016ல் நடந்த திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராகுல் சர்மா என்பவரை, வழக்கிலிருந்து விடுவித்து, கோர்ட் நேற்று உத்தரவிட்டது.
குற்றவாளிகளை கண்டறிவதற்காக நடத்தப்பட்ட அடையாளம் காணும் அணிவகுப்பின் போது, குற்றம்சாட்டப்பட்ட ராகுல் சர்மா என்பவரை கண்டுபிடிக்க, பாதிக்கப்பட்டவர் தவறியதால், அவருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கான உத்தரவை பிறப்பித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பவன்குமார் தன் உத்தரவில் கூறியிருந்ததாவது:
குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக நடத்தப்பட்ட அடையாளம் காணும் நிகழ்ச்சியில், சம்பவம் நடந்து, 11 நாட்களே ஆன நிலையில், குற்றவாளியை பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காட்டவில்லை.இது, இந்த நடைமுறையையே கேலிக்கூத்தாக்குகிறது. ஒருவரால் பாதிக்கப்பட்டால், அந்த நபரை எத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் எளிதாக அடையாளம் காண முடியும் .
அப்படி இருக்கையில், ராகுல் சர்மாவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையை விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார்.

