ADDED : ஆக 05, 2024 05:51 PM
புதுடில்லி: தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.
இதனிடையே, தனக்கு எதிரான வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரத்தை சமர்ப்பிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிடும்படி செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோயப் ஹூசைன், இந்த வழக்கை உணவு இடைவேளைக்கு பிறகு விசாரிக்க வேண்டும். அல்லது நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டார்.
செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, பென் டிரைவில் இல்லாத ஒரு ஆவணத்தை காட்டுவதாக கூறி இதுவரை அமலாக்கத்துறை 8 முறை இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதி, ஆவணத்தை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சோயப் ஹூசைன் கூறுகையில், பென் டிரைவில் இருந்து தான் எடுக்கப்பட்டது. இன்னும் பல குற்றச்சாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில ஆவணங்கள் 14.2 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொரு வேலையும் விற்கப்பட்டன. தேர்தல் பிரமாண பத்திரத்தில் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ள மொத்த விவசாய வருமானத்துக்கும், அவர் இப்போது கூறியுள்ள விவசாய வருமானத்திற்கும் முற்றிலும் வேறுபாடு உள்ளது என்றார்.