செந்தில் பாலாஜி வழக்கு; தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி
செந்தில் பாலாஜி வழக்கு; தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி
UPDATED : டிச 20, 2024 02:35 PM
ADDED : டிச 20, 2024 02:26 PM

புதுடில்லி: செந்தில் பாலாஜி வழக்கில், நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை. தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு, கடந்த செப்., 26ல் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து வெளிவந்த அவர் ,உடனடியாக அமைச்சராக பொறுப்பேற்றார். இதை குறிப்பிட்டு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, வித்தியாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
'செந்தில் பாலாஜி சாட்சிகளுக்கு அழுத்தம் தந்து, வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு இன்று (டிச.,20) நீதிபதிகள் அபய் எஸ் ஒகா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கடந்த முறை பதில் சொல்கிறோம் என்று கூறியதால் நோட்டீஸ் அனுப்பவில்லை. தற்போது வரை தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு நிவாரணம் வழங்குவதா இல்லையா என்பது தனிப்பட்ட விஷயம். இந்த மோசடியில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், இந்த வழக்கில், சாட்சியங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பட்டியலை அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கில் உள்துறை செயலாளரை ஒரு எதிர் மனு தாரராக இணைத்து நோட்டீஸ் பிறப்பித்து, பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.