அமைச்சர் பதவி குறித்து செந்தில் பாலாஜி மனு: கோர்ட் நிராகரிப்பு
அமைச்சர் பதவி குறித்து செந்தில் பாலாஜி மனு: கோர்ட் நிராகரிப்பு
ADDED : அக் 07, 2025 07:03 AM

'அமைச்சர் பதவியா? ஜாமினா?' எனக் கேட்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை தெளிவுபடுத்தக்கோரி, தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் நிராகரித்தனர்.
தமிழகத்தில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு காலிப் பணியிடங்களை நிரப்பியதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அவர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. மேலும், அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஓராண்டு சிறைவாசத்துக்குப் பின் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கிய நிலையில், அடுத்த நாளே அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஒகா, அவரை அமைச்சர் பதவியில் இருந்து விலக உத்தரவிட்டார். இதனால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, புதிதாக ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், 'பதவியில் இருந்து விலக வேண்டும்' என, முந்தைய உத்தரவில் குறிப்பிட்டிருந்தது குறித்து தெளிவுபடுத்தக் கோரினார்.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்பதற்கு ஏப்., 28ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்த தடையும் விதிக்கவில்லை.
''அது குறித்து ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. நீதி விசாரணையில் இருப்பவர், அமைச்சராக கூடாது என நீதிமன்றமும் தடுக்கவில்லை,'' என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த், ''அமைச்சராக பொறுப்பேற்க கூடாது என இந்த நீதிமன்றம் தடுக்கவில்லை. அதே சமயம், ஜாமின் கிடைத்த அடுத்த நாளே அமைச்சராக பதவியேற்றது தான் இங்கு பிரச்னை.
''இதனால், அமைச்சர் என்ற செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு விசாரணையை திசைதிருப்ப வாய்ப்பு இருக்கிறது. சாட்சிகளை கலைப்பதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும். அதை கருத்தில் கொண்டே, செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வதே நல்லது என நீதிமன்றம் சொன்னது,'' என்றார்.
இதையடுத்து பேசிய கபில் சிபல், ''அது நீதிமன்றத்தின் மனநிலையை மட்டுமே காண்பித்தது. உத்தரவில் எதிரொலிக்கவில்லை. இதன் காரணமாகவே, முந்தைய உத்தரவு குறித்து விளக்கம் தரும்படி கேட்டு இந்த மனுவை தாக்கல் செய்தோம்,'' என்றார்.
அப்போது எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் இருவரும், 'அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தால், வழக்கு விசாரணையை திசை திருப்பி விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதற்காகவே, அமைச்சர் பதவியா? ஜாமினா? என கேட்டு, இந்த நீதிமன்றம் எச்சரித்தது' என வாதிட்டனர்.
அப்போது, நீதிபதிகளின் மனநிலையை புரிந்து கொண்ட கபில் சிபல், விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
அதே போல் செந்தில் பாலாஜி தொடர்பான மற்றொரு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என எதிர்மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டது.
அப்போது, 'லஞ்சம் பெற்று அரசு காலி பணியிடங்களை நிரப்பிய வழக்குகளை, டில்லிக்கோ அல்லது வேறு பொதுவான இடத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கோ ஏன் மாற்றக் கூடாது' என, தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
- டில்லி சிறப்பு நிருபர் -