சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி விளையாட்டு போட்டிக்கு பரிசு அளிக்கிறாராம்!: கரூரில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி விளையாட்டு போட்டிக்கு பரிசு அளிக்கிறாராம்!: கரூரில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
UPDATED : மார் 07, 2024 05:10 AM
ADDED : மார் 07, 2024 05:03 PM

கரூர்: புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜி, கரூரில் வரும் மார்ச் 16 மற்றும் 17ம் தேதி நடக்கும் கால்பந்து போட்டியில் வெற்றி பெறுபவருக்கு பரிசு வழங்குவார் என வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில், அவரது பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெற்று வந்தது. அது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு நிகழ்ச்சிகளில், செந்தில்பாலாஜி பெயர், புகைப்படம் இடம்பெறவில்லை.
தி.மு.க., மாவட்ட செயலாளராக அவர் நீடிப்பதால், அவரது பெயர் புகைப்படம் இடம் பெற்று வருகிறது. பல நோட்டீஸ்களில் செந்தில்பாலாஜி சிறப்புரை ஆற்றுவார் என்று அச்சடிக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்.,12ம் தேதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.
தற்போது, மார்ச் 16, 17ல் கரூர் வெண்ணைமலையில், தனியார் அமைப்பு சார்பில் கால்பந்து போட்டிகள் நடக்கிறது. முதல் பரிசு, 40 ஆயிரம் ரூபாய் வழங்குபவர் கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி என்ற பிளக்ஸ் பேனர் கரூர் மாநகராட்சியின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜி எப்படி பரிசு வழங்குவார் என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பி போய் உள்ளனர்.

