திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்தா; மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்தா; மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : நவ 08, 2024 01:29 PM

புதுடில்லி: 30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு எப்படி தனிமாநில அந்தஸ்து வழங்க முடியும்? என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றம் சாட்டினார். ஆய்விலும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன.
அந்த வகையில், தேவஸ்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், 'திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திரா அரசு, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சி.பி.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று (நவ.,08) நீதிபதி கவாய் தலைமையான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கோவிலுக்கு நாங்கள் எப்படி தனிமாநில அந்தஸ்து கொடுக்க உத்தரவிட முடியும்? ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என நாங்கள் கூற முடியாது.
30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு எப்படி தனிமாநில அந்தஸ்து வழங்க முடியும்? இது போன்ற மனுக்களை எப்படி விசாரிக்க முடியும்? இவ்வாறு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.