திராவிட மாடல் அரசியலை ஆக்கிரமித்த பிரிவினைவாத மனநிலை: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
திராவிட மாடல் அரசியலை ஆக்கிரமித்த பிரிவினைவாத மனநிலை: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
UPDATED : செப் 07, 2025 10:42 PM
ADDED : செப் 07, 2025 10:34 PM

புதுடில்லி: ஊழல் மற்றும் ஜாதி மோதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாத திமுக அரசு, பாஜவுக்கு எதிராக மொழி மற்றும் திராவிட கொள்கை குறித்த விவகாரங்களை எழுப்புவதாக குற்றம்சாட்டியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மனநிலை ஆக்கிரமித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக ஆட்சியில் தமிழக அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், ஜாதி வன்முறை, தலித்கள் மீதான தாக்குதல், போதைப்பொருள் புழக்கம் ஆகியன அதிகரித்து காணப்படுகின்றன. ஆனால், இவற்றுக்கு திமுக அரசு பதில் சொல்வது இல்லை. இந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், அக்கட்சி பிரிவினைவாத விஷயங்களை முன்னிறுத்துகிறது. தங்களின் வரிப்பணம் பீஹார் மாநிலத்துக்கு செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர். பீஹார் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது. பீஹாரை சேர்ந்த மக்கள், உங்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். அதன் மூலம் நீங்கள் லாபம் ஈட்டுகிறீர்கள். ஆனால், உங்களின் வரிப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்கிறீர்கள். திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மன நிலை ஆக்கிரமித்துள்ளது.
ரத்தம் கொதிக்கிறது
சமூக நீதியின் பாதுகாவலர்கள் என திமுக மார்தட்டுகிறது. ஆனால், மாநிலத்தின் பல பகுதிகளில் ஜாதிமோதல்கள் நடந்து வருகின்றன. குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படுகிறது. இதை கேட்டதும் எனது ரத்தம் கொதிக்கிறது. ஜாதி ரீதியிலான ஆணவக்கொலை மாநிலம் முழுவதும் நடக்கிறது. திமுக காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிக்கு சவாலாக அதிமுக பாஜ கூட்டணி திகழும். திமுகவின் மோசமான நிர்வாகம் உச்சத்தில் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றுள்ளனர்.போதைமருந்து கடத்தல்காரருடன் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு உள்ளது.
ஆனால், இதற்கு நேர்மாறாக மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி உள்ளது. இதனை மக்கள் பார்த்து வருகின்றனர். துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஆற்றி வரும் பணிகளை மக்கள் பார்த்து வருகின்றனர். மாநிலத்தில் மதுபானம் ஆறுபோல் ஓடுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி அருகே போதை மருந்து விற்கப்படுவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து தாழ்த்தப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.